Showing posts with label Movie Review. Show all posts
Showing posts with label Movie Review. Show all posts

தளபதி படத்தில் மகாபாரத கதையை எடுத்துக் கொண்ட மணிரத்னம் இந்தமுறை எடுத்திருப்பது ராமாயணத்தை.
மலைவாழ் மக்களின் ஆதர்ஷ நாயகனாக இருப்பவன் வீரா (விக்ரம்). ஆனால் காவல்துறையை பொறுத்தவரை பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி. வீராவின் அண்ணன் சிங்கராசா (பிரபு)இ தம்பி சக்கரை (முன்னா), தங்கை வெண்ணிலா (ப்‌ரியாமணி).

வெண்ணிலாவின் திருமணத்தன்று வீராவை பிடிக்க வரும் போலீஸ் ப்‌ரியாமணியை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் வெண்ணிலாவின் இறப்புக்கு பழி வாங்க போலீஸ் அதிகா‌ரி தேவின் (பிருத்விரா‌ஜ்) மனைவி ராகினியை (ஐஸ்வர்யாராய்) வீரா கடத்துகிறான். ராகினியின் துணிவும், அழகும் வீராவை கவர்கிறது. இந்த பொருந்தாத காதல் நடைமுறைக்கு ச‌ரிவராது என்று அவளை அவளது கணவன் தேவுடன் அனுப்பி வைக்கிறான் வீரா. ஆனால் தேவ் மனைவியின் கற்பை சந்தேகப்படுகிறான். ராகினி கணவனைவிட்டு வீராவை தேடி வருகிறாள். அவளுக்கும் வீரா மீது காதல் தோன்றுகிறது. ஆனால் ராகினி ஒரு துருப்பு சீட்டு என்பதை நாமும், வீராவும் உணரும் போது காலம் கடந்துவிடுகிறது.
மணிரத்னத்தின் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷுவல் ட்‌ரிட் ஒவ்வொரு ப்ரேமிலும் நிரம்பி வழிகிறது. குறிப்பாக உசுரே போகுதே பாடல் காட்சி. இத்தனை அடர்த்தியான, அழகான காட்டை இதற்குமுன் எந்த தமிழில் சினிமாவிலும் பார்த்ததில்லை என்று உறுதியாக கூறலாம்.

ரஹ்மானின் இசையில் உயிரே போகுதே, வீரா பாடல்கள் கவர்கின்றன. நடிப்பைப் பொறுத்தவரை அனைவருமே பாஸ் மார்க் வாங்குகிறார்கள். ஆனாலும் டிஷ்டிங்ஸன் விக்ரமுக்கும், ஐஸ்வர்யாராயுக்கும்தான். முரட்டு வீரா கதாபாத்திரத்துக்கு அப்படியே பொருந்திப் போகிறார் விக்ரம். முகபாவங்கள் காட்டி வந்த ஐஸ்வர்யாராய்க்கு தனது உடல் பலத்தையும் காட்ட வேண்டிய கதாபாத்திரம். படத்தின் நிறைவான கதாபாத்திரமும் இவருடையதுதான். அனுமானை நினைவுப்படுத்தும் காட்டிலாகா அதிகா‌ரியாக வருகிறார் கார்த்திக். நீ இனிமே இங்கத்தானே இருக்கப் போற என்று விக்ரம் சொன்னதும் ஒரு முகபாவம் காட்டுகிறாரே...சபாஷ். பிரபு, ப்‌ரியாமணி,முன்னா, ரஞ்சிதா ஆகியோருக்கு இந்தப் படம் இன்னொரு வாய்ப்பு மட்டுமே.

சந்தோஷ் சிவன், மணிகண்டன் இருவரும் அசுரத்தனமாக உழைத்திருக்கிறார்கள். சமீர் சந்தாவின் கலை இயக்கம் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக அந்த சிவன் சிலையும்,கோடு போட்டா பாடல் காட்சியில் வரும் அந்த கோயில் பகுதியும். ஆக்சன் காட்சிகளும் பழுதில்லை.

தொழில்நுட்பம் மற்றும் நடிப்பைப் பொறுத்தவரை ராவணன் படத்தில் குறைகள் பெருமளவு இல்லை என்றே சொல்லலாம். ஆனால் படம் ரசிகர்களை கவர்கிறதா என்றால், இல்லை. படத்தின் நிறைகள் ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் பொருந்தாமல் குழப்பியடிப்பதுதான் முக்கிய காரணம்.

படத்தின் மைய கதாபாத்திரம் வீரா. ஆனால் இந்த வீரா யார் என்று சா‌ரியாக காட்டப்படவில்லை. ஒருநேரம் கிராமத்தில் இருக்கிறார். இன்னொரு நேரம் மலைவாழ் மக்களுடன் இருக்கிறார். இவர் போராடுவது இதில் யாருக்காக? குறிப்பாக எதை எதிர்த்துப் போராடுகிறார்? மலைவாழ் மக்கள் வீராவைப் பற்றி சொல்லும் சித்திரம் அந்த கதாபாத்திரத்தை விளக்குவதற்குப் பதில் குழப்பவே செய்கிறது. இந்த தடுமாற்றம் உரையாடல், லேண்ட்ஸ்கேப், கலை இயக்கம் என்று எல்லாவற்றிலும் பிரதிபலிக்கிறது.

படத்தின் மிகப் பெ‌ரிய ஏமாற்றம் பின்னணி இசை. பெரும்பாலான நேரம் காட்சிக்கு ஒட்டாமலே ஒலிக்கிறது. உதாரணமாக ஐஸ்வர்யாராய் விக்ரமை தாக்கும் இடம். அவர் ஆக்ரோஷமாக தாக்க, விக்ரம் அதை ரொமான்டிக்காக அனுபவிக்க பின்னணியில் யாத்தே... காட்டு சிறுக்கி என்றெல்லாம் ஈனஸ்வரத்தில் பாடல் வருகிறது. நடிப்பு,உணர்வு, சூழல், பின்னணி இசை என எதுவும் பொருந்திப் போகாத இடங்களில் இதுவும் ஒன்று.

வசனத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். ப்‌ரியாமணி திருநெல்வேலி ஸ்லாங்கில் ஏல போட்டு பேசுகிறார். திடீரென அம்புட்டுதேன் என்று திருநெல்வேலிக்கு சம்பந்தமில்லாமலும் பேசுகிறார். தங்கை திருநெல்வேலி பாஷை பேச அண்ணன்கள் பேசுவதோ வேறு ஒன்று.

தண்ணீருக்கு நடுவில் படகை உடைத்து ஒரு பெண் கடத்தப்படுகிறhள். கடத்தியது யார் என்று தொ‌ரியாது. என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியாது. இந்நிலையில் அந்தப் பெண் என்ன செய்வாள்? மணிரத்னம் படத்தின் நாயகிஆக்ரோஷமாக கவிதைப் படிக்கிறாள். யதார்த்தத்தை மீறி மணிரத்னம் செய்யும் இந்த ரொமான்டிஸம் படம் நெடுக வருகிறது. படத்தின் சீ‌ரிஸ்னசுக்கு வேட்டு வைப்பது இந்த ரொமான்டிஸம்தான்.

படத்தின் இன்னொரு முக்கியமான குறை லேண்ட்ஸ்கேப். கதை திருநெல்வேலி அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரம் என்ற ஊ‌ரில் நடிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அங்கு நடக்கும் ப்‌ரியாமணியின் திருமண ஊர்வலத்தில் வாரணாசியில் உள்ளது போன்ற கோயில்களும் கோபுரங்களும் பின்னணியில் வருகின்றன. வட இந்தியர்களைப் போலதான் பலநேரம் உடை உடுத்தியிருக்கிறார்கள் இந்த திருநெல்வேலி மக்கள். ஃபெர்பக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படுகிற மணிரத்னத்தின் படத்தில்தான் கதைக்களம் இந்தளவுக்கு துண்டாடப்பட்டிருக்கிறது. (இதற்கு முந்தையப் படம் குரு).

கதை கூறும் முறையிலும் கோர்வையில்லாமல் காட்சிகளும், உணர்வுகளும் துண்டாடப்படுகின்றன. படத்தின் லா‌‌ஜிக் மீறல்கள் பற்றி பல பாராக்கள் எழுதலாம். மொத்தத்தில்,

ராவணன் - ஆன்மா இல்லாத அழகு.

ரசிகர்களை கேளிக்கைப்படுத்தும் படங்களுக்கு மத்தியில் கேள்வி கேட்பது மாதி‌ரி எப்போதாவதுதான் ஒரு படம் வரும். வசந்தபாலனின் அங்காடித்தெரு அப்படியொரு குறிஞ்சி. முதலிலேயே சொல்லிவிடுகிறோம்.. கலாபூர்வமான குறைபாடுகள் சில அங்காடித்தெருவில் இருக்கலாம். ஆனால், வசந்தபாலன் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களத்துக்கு முன்னால் அது ஒரு விஷயமேயில்லை.


மழைக்குப் பிந்தைய சென்னையின் இரவு. இளம் காதலர்களான ஜோதி லிங்கமும் சேர்மக்கனியும் (மகேஷ் - அஞ்சலி) இரவை கழிக்க வேறு இடமில்லாமல் நடைபாதையில் ஒதுங்குகிறார்கள். மகிழ்ச்சியுடன் உறங்கத் தயாராகும் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது அந்த கோர விபத்து. இளமையின் விளிம்பில் நிற்கும் அவர்களை நடைபாதையின் இருளுக்கு துரத்தியடித்தது எது?

பிளாஷ்பேக்கில் வி‌ரிகிறது லிங்கத்தின் கதை. அது கதையல்ல... பெரும் வர்த்தக நிறுவனங்களின் பளபள பகட்டுக்கு பின்னாலுள்ள மனித சுரண்டல் கசடுகள்.

வறட்சியின் பிடியில் இருக்கும் தென்னக கிராமங்களிலிருந்து சென்னை ரங்கநாதன் தெருவிலுள்ள கடைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்பா இல்லாதவன், அக்கா, தங்கை உள்ளவனா செலக்ட் பண்ணு என்று சொல்லும்போதே திறந்துவிடுகிறது வர்க்கச் சுரண்டலுக்கான வாசல்.

விபத்தில் அப்பாவை பறிகொடுத்த ஜோதி லிங்கமும் இந்த ஜோதியில் ஒருவன். அவனுக்கு துணையாக நண்பன் பிளாக் பாண்டி. பத்து மாடி கடையில் வேலை என்று ஆர்வத்துடன் வருகிறவர்களை பத்தே வினாடியில் பதற வைக்கிறது அதிகாரத்தின் அடக்குமுறை.

உங்க யூனிஃபார்மை போட நாங்க எதுக்கு காசு தரணும் என அப்பாவியாக கேட்பவனுக்கு அப்போதே கன்னத்தில் பதில் கிடைக்கிறது. 12 மணி நேரத்துக்கு மேல் வேலை, பன்றிக்கூடம் மாதி‌ரி ஒரு சாப்பாட்டு அறை, அதில் அடித்துப் பிடித்து சாப்பிட்டு வந்தால் தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் சம்பளத்தில் பிடித்தம், ஆண் என்றால் மிருகத்தனமான அடி, பெண் என்றால் கூடுதலாக பாலியல் பலாத்காரம்... வர்த்தக நிறுவனங்களின் இரக்கமற்ற இதயத்தை தேடித் தேடி படமாக்கியிருக்கிறார் வசந்தபாலன்.

மூச்சுத் திணறும் இந்த சூழலில் லிங்கத்துக்கு கனி மீது காதல் மொட்டவிழ்வது கவிதை. பாலியல் ஈர்ப்பாக இல்லாமல் பரஸ்பரம் தோள் கொடுப்பதாக இருக்கிறது இந்த உறவு. இந்த‌க் காதல் கடை அண்ணாச்சியின் (பழ.கருப்பையா)கவனத்துக்கு வர, அரங்கேறுகிறது உச்சபட்ச வன்முறை. சொந்த முயற்சியில் வாழலாம் என கடையிலிருந்து வெளியேறுகிறார்கள் இருவரும். சுதந்திரத்தை சுவாசித்த இரண்டாவது நாளில்தான் நடக்கிறது அந்த விபத்து. சோகத்தின் இறுதியிலும் நம்பிக்கையின் தளிரை படரவிட்டு முடிகிறது படம்.

நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் ஏலச்சீட்டு நடத்தும் கனி கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்துகிறார் அஞ்சலி. அகலமான கண்களில் உணர்ச்சியின் பிரவாகம். குடும்பத்துக்காக மகேஷ் தன்னை விலக்கும் போது கோபித்துக் கொள்வதும், வயதுக்கு வந்த தங்கைக்கு சடங்கு செய்ய முடியாமல் புலம்புவதும் சிறப்பித்து சொல்ல வேண்டிய இடங்கள்.


அப்பாவி கிராமத்து இளைஞனாக மகேஷ் கச்சிதம். அஞ்சலியை கொடுமைப்படுத்தும் சூப்பர்வைசர் (வெங்கடேஷ்) மீது வெறிகொண்டு பாயும்போது திரையரங்கே ஆர்ப்ப‌ரிக்கிறது. சூப்பர்வைசர் எனும் குட்டி முதலாளிகளின் ஒட்டுமொத்த உருவமாக வருகிறார் வெங்கடேஷ். முட்டை கண்ணும் பட்டை கண்ணாடியுமாக அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் என்ன செய்யப் போகிறாரோ என திணறுகிறது திரையரங்கு. இடையில் வந்து போகும் சக தொழிலாளியின் காதலும், தற்கொலையும் கூட மனசை பிசைகிறது.

கண் தெ‌ரியாத பாய், குள்ள மனிதனுக்கு வாழ்க்கைப்பட்ட முன்னாள் பாலியல் தொழிலாளி, அசுத்தமான கழிப்பறையை கழுவி கட்டண கழிப்பிடமாக்கும் இளைஞன் என கடைக்கு வெளியே வசந்தபாலன் காட்சிப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு வாழ்க்கையும் ஹைக்கூ. இந்த உதி‌ரிப்பூக்கள்தான் அங்காடித்தெருவை முழுமைப்படுத்துகிறது.

மகேஷ் சென்னைக்கு வரும் காட்சி, கழிப்பறை இளைஞன் காஸ்ட்லி ட்ரெஸ்ஸில் ரயிலில் வந்திறங்குவது என்று ஓ‌ரிரு இடங்களில் மட்டுமே பின்னணி இசை சிறப்பு சேர்த்திருக்கிறது. மற்ற இடங்கள் மிகச் சாதாரணம். கதையோடு பொருந்தி வருகின்றன அவள் அப்படியொன்றும் அழகில்லை, உன் பெயரை சொல்லும் போதே பாடல்கள். மற்றப் பாடல்கள் இல்லையென்றாலும் பாதகமிருந்திருக்காது படத்துக்கு.

இறுக்கமான கதைக்கு பொருத்தமான ஒளிப்பதிவு. குறிப்பாக சென்னையின் இரவுக் காட்சிகள். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், கலை இயக்குன‌ரின் பங்களிப்பு என அனைத்துமே நிறைவு. ஜெயமோகனின் வசனங்கள் படு இயல்பு. விக்க‌த் தெ‌ரிந்தவன்தான் வாழத் தெ‌ரிந்தவன் என்பது போன்ற தத்துவ தெறிப்புகளும் உண்டு. வாடிக்கையாளர்கள் வருவதற்கு முந்தைய அதிகாலை ரங்கநாதன் தெருவும், அவர்கள் நீங்கிய பிறகான பின்னிரவு தெருவும் இயக்குன‌ரின் உழைப்பு எத்தகையது என்பதை உணர்த்துகின்றன.

நாடு ஒளிர்வதாக சொல்லும் அதிகாரவர்க்கம், அம்பானி போன்ற ஓ‌ரிருவர் பணக்கார பட்டியலில் இடம்பெறும் போது இந்தியா உயர்ந்துவிட்டதாக பெருமை பேசும் அரசியல்வாதிகள், வல்லரசாகிவிட்டோம் என வீம்பு கொள்ளும் கனவான்கள் எல்லோர் மீதும் காறி உமிழ்ந்திருக்கிறது அங்காடித்தெரு. எப்படி துடைத்தெறியப் போகிறோம் இதை?

நடிப்பு: விஷால், சந்தானம், மயில்சாமி, நீத்து சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென், பிரகாஷ்ராஜ், மவுலி

ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா

இசை: யுவன் சங்கர் ராஜா

இயக்கம்: திரு

தயாரிப்பு: ஜிகே பிலிம் கார்ப்பரேஷன்

வங்கியில் பணியாற்றும் மவுலியின் மகன் விஷால் வாழ்க்கையில் தனக்கு எல்லாமே பெஸ்ட் ஆக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

மனைவியாக வருபவளும் மிகச்சிறந்த ஒருத்தியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். தனது விருப்பம் நிறைவேற மூன்று அழகிகளை குறிவைத்துக் காதலிக்கிறார்.

பணக்கார பெண்ணான நீது சந்திரா, ஆண்களென்றாலே ஆகாத தனுஸ்ரீ தத்தா, உண்மையான காதல் கொண்ட ஆணைத் தேடும் சாரா ஜென் ஆகிய மூவரும்தான் அந்த அழகிகள். மூவரிடமும் மூன்று விதமான பொய்முகம் காட்டி வளைக்கிறார்.

மூவருமே காதலில் விழுந்து உருக ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் நீத்து சந்திராவுக்கு விஷாலின் நோக்கம் தெரிந்துவிடுகிறது. இதில் கோபம் கொள்ளும் நீத்து வன்மத்துடன் மற்ற பெண்களையும் விஷாலுக்கு எதிராகத் திருப்பும் முயற்சியில் இறங்க, விஷால் விழிக்க, இறுதியில் அவர் யாரைக் கரம்பிடித்தார் என்பது க்ளைமாக்ஸ்.

விளையாட்டுப் பிள்ளையாக வரும் விஷால் நன்றாகவே செய்திருக்கிறார், விளையாட்டுக் குறும்புகளை. வக்கிரமாக எதையும் செய்யாமல், மூன்று பெண்களையும் விதவிதமாக அவர் காதலிப்பது கலகலப்புக்கு உத்தரவாதம்.

ஆனால் சில காட்சிகளில் இன்னும் அவர் விஜய்யை இமிடேட் செய்வது சகிக்கலை.

தனுஸ்ரீ தத்தாவின் அண்ணன் பிரகாஷ் ராஜிடம் மாட்டிக் கொண்டு அவர் விழிக்கும் இரண்டு காட்சிகள் அக்மார்க் திருதிரு ரகம்.

மூன்று நாயகிகள் இந்தப் படத்தில். அதிகமாக உடை தேவைப்படுவது தனுஸ்ரீ தத்தாவுக்குதான். நீத்து சந்திரா கவர்ச்சிக் குதிரை மாதிரி ஓடிக் கொண்டே இருக்கிறார் பாடல் காட்சிகளிலும்.

எப்போதும் தூங்கி வழிவது போன்ற தோற்றத்தில் சாரா ஜென். பீர் தொட்டியில் ஊறி எழுந்தவர் மாதிரி பம்மென்று தெரியும் தனுஸ்ரீ தத்தாவிடம் அழகு, நடிப்பு இரண்டுமே வறட்சி.

படத்தின் பெரிய ப்ளஸ் சந்தானமும் மயில்சாமியும். அவர்கள் வாயைத் திறந்தாலே, ரசிகர்கள் கைதட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பெஸ்டான காதலியை தேர்ந்தெடுக்க விஷால் கண்டுபிடிக்கும் ரூட் எப்படி தப்பானதோ, அதேபோல காதலிகளைக் கழட்டிவிட அவர் சொல்லும் காரணங்களும் 'தப்பு தப்பு'.

சீட்டுக் குலுக்கிப் போட்டு காதலியை தேர்வு செய்யும் இந்த சீப் டெக்னிக் சரியா? என்ற கேள்விகளுக்கு வழக்கம்போல கதாநாயகன் க்ளைமாக்ஸில் மனம் திருந்தி பதில் சொல்கிறார்.

பிரகாஷ் ராஜூக்கு சின்ன ரோல்தான். ஆனால் சிறப்பாக செய்திருக்கிறார். மவுலி வழக்கம்போல கலகல. அவர் மனைவியாக வரும் பெண்மணியும் ஓகே. சாரா ஜென் பால் காய்க்க வரும் காட்சியில் அவர் நடிப்பு அசல் மிடில்கிளாஸ் அம்மா!

படம் முழுக்க நெற்றிக்கண் படத்தின் பின்னணி இசையை ஓடவிட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அது படத்துக்கு சரியாகப் பொருந்தினாலும், சொந்த சரக்கையும் கொஞ்சம் அப்பப்போ எடுத்து விடுங்க. இல்லன்னா மேல்மாடி காலின்னு கமெண்ட் வரும். 'தீராத விளையாட்டுப் பிள்ளை' பாடல் இனிமை.

இது சீரியஸாக எடுக்க வேண்டிய படமில்லை என்று இயக்குநருக்கு ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது போல. அதனால் ரசிகர்களும் 'ஜஸ்ட் டைம் பாஸ்' என்று சொல்லிக் கொண்டே வெளியேறுவதைக் கவனிக்க முடிந்தது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை ரசிகர்கள் கருத்தே நமது தீர்ப்பும்!

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் இணைந்து தயா‌ரித்திருக்கும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கௌதம் வாசுதேவ மேனன் படத்தை இயக்கியிருக்கிறார்.


WDஉதவி இயக்குனர் ஒருவர் கேரளாவிலிருந்து வரும் இளம் பெண்ணுடன் காதல் கொள்வதும் அதனால் வரும் பிரச்சனைகளும், காதலின் முடிவும்தான் படத்தின் கதை. கார்த்திக் என்ற உதவி இயக்குனராக சிம்பு நடித்துள்ளார். மலையாள கிறிஸ்தவ பெண் ஜெஸ்ஸியாக த்‌ரிஷா.

இவர்கள் இருவரையும் மிக இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் கௌதம். படத்தின் கிளைமாக்ஸை நியூயார்க் நக‌ரில எடுத்துள்ளனர்.

“விண்ணைத்தாண்டி வருவாயா என்னுடைய கே‌ரியல் முக்கியமான படமாக இருக்கும். சிம்பு படம்னா விரல் வித்தை, பன்ச் டயலாக் இருக்கும்னு ஒரு இமே‌ஜ் இருக்கு இல்லையா? அதை இந்தப் படம் மாற்றும்” என கூறுகிறார் சிம்பு.

“நான் இயக்கிய படங்களிலேயே மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம் இது. பிடித்த படமும் இதுதான்” என்கிறார் கௌதம். ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர விசிறி த்‌ரிஷா. அவரது இசையில் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் விருப்பம். அந்த விருப்பம் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதாக சந்தோஷப்படுகிறார்.

கௌதமின் ஆஸ்தான கவிஞர் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார். மனோ‌ஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு. ஆண்டனி எடிட்டிங். கலை ரா‌ஜீவன். உடை நளினி ஸ்ரீராம்.

படத்தில் சிம்பு, த்‌ரிஷா உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறுகிறது. இதன் காரணமாக படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

பணக்காரப் பெண், ஆண்களை வெறுக்கும் பெண், வீட்டில் கல்யாண நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கும் பெண்

எல்லாவற்றிலும் சிறந்ததை நாடும் விஷால் உல்லாசப் பேர்வழி. பல உருப்படிகளையும் அலசிப் பார்த்த பிறகே தனக்கானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளவர். இந்தப் பழக்கத்தைக் காதல் விஷயத்திலும் கடைப்பிடிக்க விரும்புகிறார். அதாவது ஒரே நேரத்தில் மூன்று பெண்களைக் காதலிப்பது, அவர்களில் சிறந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கல்யாணம் செய்துகொள்வது. இந்தத் திட்டத்துக்கு சாரா ஜென், தனுஸ்ரீ தத்தா, நீத்து சந்திரா ஆகிய பெண்கள் அவர் வலையில் விழுகிறார்கள். அதில் நீத்து சந்திராவுக்கு விஷாலின் சுய ரூபம் தெரிந்துவிட நீத்து பழிவாங்கக் கிளம்புகிறார். அதை விஷால் எப்படிச் சமாளிக்கிறார், கடைசியில் யாரை, எப்படிக் கல்யாணம் செய்துகொள்கிறார் என்பதே படம்.

பணக்காரப் பெண், ஆண்களை வெறுக்கும் பெண், வீட்டில் கல்யாண நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கும் பெண் ஆகிய மூன்று பெண்களிடமும் மூன்று விதமான பொய் வேடம் போட்டு விஷால் ஏமாற்றும் காட்சிகள் ஓரளவு கலகலப்பாக இருக்கின்றன. ஆனால், அந்தக் காட்சிகளை இன்னும் நன்றாக யோசித்திருக்கலாம். எல்லா ஐடியாக்களுமே அசட்டு வாடை!

விஷாலின் குட்டு உடைபட்டு அவருக்கும் நீத்து சந்திராவுக்கும் இடையே மோதல் தொடங்கிய பிறகு நடக்கும் சில திருப்பங்கள் பரவாயில்லை. மூன்று பெண்களுக்கும் உரிய இடம் அளிக்க வேண்டும் என்பதற்காகப் படத்தை இழுத்துக்கொண்டே போகிறார் இயக்குநர்.

சந்தானம், மயில்சாமி, சத்யன், ஆகியோர் புடை சூழ வேலை வெட்டி இல்லாத உல்லாசப் பறவையாக வருகிறார் விஷால். பெண்களிடம் நடித்து ஏமாற்றும் காட்சிகளில் கொஞ்சம் வித்தியாசமான விஷாலைப் பார்க்க முடிகிறது. வழக்கமான ஆக்‌ஷன் ஹீரோவாக சண்டையும் போடுகிறார். கடைசியில் காதலின் அருமையை (?) உணரும் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடிக்க முயல்கிறார். பல இடங்களில் விஜய் போல இமிடேட் செய்கிறார்!

நாயகனின் பைத்தியக்கார பாலிசியை முதலில் தெரிந்துகொள்ளும் நீத்துதான் நடிப்பிலும் முந்திக்கொள்கிறார். தனுஸ்ரீ,சாரா இருவருமே விஷாலுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக போடும் திட்டங்களில் திகட்டத் திகட்ட ரசிக்கவைக்கிறார். கூடவே கிளர்ச்சி ஏற்படுத்தும் உடலமைப்பாலும் கவர்ந்திழுக்கிறார்.

தனிஸ்ரீ தத்தா செழுமையாக இருக்கிறார். ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் இடங்களில் ஓரளவு நன்றாக நடிக்கிறார். விஷாலை நிஜமாகக் காதலிக்கும் பாத்திரத்தில் வரும் சாராவின் முகத்தில் எப்போதும் சோகம் அப்பியிருப்பது ஏன் என்று தெரியவில்லை. இவரது நடிப்பைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை.

பெயருக்கு மட்டும் ஆளுக்கொரு வேலையைச் சொல்லிக்கொண்டு காமெடியன்களாக தலைகாட்டும் சந்தானம், சத்யன், மயில்சாமி கோஷ்டியினரின் சேட்டைகள் படத்துக்குக் கொஞ்சம் கலகலப்பைச் சேர்க்கின்றன. மொத்தமே மூன்று காட்சிகளில் வரும் பிரகாஷ்ராஜுக்குக் கிடைத்துள்ள பாத்திரம் அவருக்கு எந்தச் சவாலையும் தரவில்லை.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் வித்தியாசமாக உள்ளன. தீராத விளையாட்டுப் பிள்ளை பாடல் மனதில் சட்டென்று ஒட்டிக்கொள்கிறது. அரவிந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாகப் பாடல் காட்சிகளில்.

பெண்களை சக மனிதர்களாக அல்லாமல் தன் காதல் விளையாட்டுக்கான பொம்மைகளாக நினைக்கும் கதாபாத்திரம்தான் இந்தப் படத்தின் மையம். விஷால், சட்டை, செருப்பு இத்யாதிகளுடன் பெண்களை ஒப்பிட்டுப் பேசுவதை அந்தப் பாத்திரத்தின் பார்வை என்று மன்னித்தாலும் நீ பொம்பள, நான் ஆம்பள என்று விஷால் பொதுவாகப் பேசி ஒட்டுமொத்தமாகப் பெண்களை மட்டம் தட்டுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. படத்தில் பல இடங்களில் பெண்களையும் அவர்களது நேர்மையையும் கொச்சைப்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

நாயகன் கடைசியில் மனம் மாறி வருந்துவதாகக் காட்டும் இயக்குநர், அதையும் காமெடியாக்கி நாயகனின் ஆண் திமிருக்கு உரம் சேர்க்கிறார். படத்தின் மையப் பாத்திரத்தின் நோக்கும் போக்கும் பிற்போக்குத்தனமாகவும் சில்லுண்டித்தனமாகவும் இருப்பதால் பாத்திரத்துடன் நம்மால் எந்த விதத்திலும் ஒன்ற முடியவில்லை.

'நீ சரியான ஆம்பிளைய இருந்தா...' என்று நீத்துவும், 'உங்கிட்ட எவ்வளவுதான் பணம் இருந்தாலும் நீ பொம்பளடி; எங்கிட்ட எதுவும் இல்லாட்டியும் நான் ஆம்பளைடி' போன்ற வசனங்களில் இயக்குனர் திருவின் சிந்தனையில் துரு.

எல்லோருமே விளையாட்டுப் பிள்ளைகளாக இருந்ததுதான் வினையாயிவிட்டது!

ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விக்ரம் கிருஷ்ணா தயா‌ரித்திருக்கும் மற்றுமொரு விஷால் படம். திரு படத்தை இயக்கியிருக்கிறார். இவர் தேசிய விருது வாங்கிய இயக்குனர் அகத்தியனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.


தீராத விளையாட்டுப் பிள்ளை வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெஸ்டாக செலக்ட் செய்யும் ஒரு பணக்கார இளைஞனைப் பற்றியது. தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணும் தி பெஸ்டாக இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று பெண்களை காதலிக்கிறான், மூன்றில் ஒருவரை திருமணம் செய்யும் நோக்கத்துடன்.

இந்த த்‌‌ரீ இன் ஒன் லவ் என்ன மாதி‌ரியான பிரச்சனைகளை கொடுத்தது என்பது கதை.

நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென் என்று மூன்று நாயகிகள். சினேகா முக்கியமான வேடம் ஒன்றில் நடித்துள்ளாராம். விஷாலுக்கு காமெடி விஷயத்தில் கை கொடுத்திருப்பவர் சந்தானம்.

முஷ்டி மடக்காமல் விஷால் நடித்திருக்கும் முதல் ரொமாண்டிக் காமெடி என்று இந்தப் படத்தைச் சொல்லலாம். பாடல் காட்சிகளுக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள். நீது சந்திராவை தண்ணிக்குப் பதில் கார மிளகாயில் குளிக்க வைத்த காட்சியொன்றும் படத்தில் உண்டு.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு அர்விந்த் கிருஷ்ணா. வாலி, பா.விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் மகன் திலிப் சுப்பராயன் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறார்.

நாளை வெளியாகும் இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

நடிப்பு: அஜித் , பிரபு , சமீரா ரெட்டி , பாவனா , சுரேஷ் , யூகி சேது, சம்பத் , ராஜீவ் கிருஷ்ணா.
இசை : பரத்வாஜ்
இயக்கம் : சரண்
தயாரிப்பு : சிவாஜி பிலிம்ஸ்
கதை:

பிரான்ஸில் வசிக்கும் ஜீவானந்ததின்(அப்பா அஜீத்) மனைவியின் மகன்களுக்கும் , அவருடைய இரண்டாவது மனைவியின் மகனுக்கும்(மற்றொரு அஜீத்) நடக்கும் போட்டியில் யார் அசல் வாரிசாக இறுதியில் ஜெயிக்கிறார்கள் என்பதே.

சரண் தன்னுடைய வழமையான பாணியிலேயே அசல் திரைக்கதையையும் உருவாக்கியிருக்கிறார்.

ஜீவானந்தம் பிரான்சில் சட்டப்படி பல‌ நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை நடாத்தி வருகிறார். ஜீவானந்தத்திற்கு மூன்று மகன்கள் சட்டபூர்வ மனைவிக்கு சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா என்ற இருமகன்கள். இல்லீகல் மனைவிக்கு மகனாக‌ சிவா (மற்றொரு அஜீத்).

ஜீவானந்தம் சிவாவை நம்பித்தான் அனைத்துப் பொறுப்புக்களையும் ஒப்படைக்கிறார். ( நம்ம ஹீரொவாச்சே) இதனால் மற்ற இரு மகன் மாருக்கும் கோபம். ஜீவானந்திற்கு பிடிக்காத சட்டவிரோத‌ ஆயுத வியாபாரம் செய்ய முற்படுகின்றனர் இருவரும். இந்நிலையில் ஜீவானந்தம் மகன்களால் கொல்லப்படுகிறார்ஆயூத கடத்தலில் ஏற்படும் போட்டி காரணமாக ராஜீவ் கிருஷ்ணாவை மும்பையில் இருக்கும் கும்பல் கடத்துகிறது. அவரை விடுவிக்க அஜீத் மும்பை பயனமாகிறார். அவருடன் அவருடைய உதவியாளர் சமீராவும் மும்பை செல்கிறார். சமீராவுக்கு அஜித் மேல் காதல்.

மும்பையில் ஜீவானந்ததின் நண்பரான பிரபுவின் பாதுகாப்பில் இருக்கின்றனர். பிரபுவிடம் வேலை பார்க்கும் பாவனாவும் கண்டவுடன் காதல் கொள்கிறார். மேலும் பிரபுவிடம் வேலைபார்க்கும் டான் சமோஷா பேரைப்படித்தாலே காமெடி பீஸூனு தெரியுது தானே ஆமாம் கதையின் சொந்தக்காரரான யூகி சேது. அவருக்கு இரண்டு அடிப்பொடிகள் ஜீரா , சட்னி என்ற பெயர்களுடன் இவர்கள் செய்யும் சேட்டைகள் சிறிது சிரிப்பை வரவழைக்கின்றன.

இடையே பாவனா இரண்டு டூயட்டும், சமீரா ஒரு டூயட்டும் முடிக்கின்றனர். மும்பை கும்பலில் இருந்து ராஜீவ் கிருஷ்ணாவை மீட்டும் திரும்பும் போது அஜீத்தை போட்டு தள்ளுகின்றனர் ராஜீவும், சம்பத்தும். அத்தோடு இடைவேளை விட்டாச்சு.

இரண்டாம் பாதியில் அந்த குண்டடியில் இருந்து நம்ம ஹீரோ தப்பி வருகிறார். ( நம்ம தலையை கொல்ல இன்னும் துப்பாக்கி குண்டு கண்டு பிடிக்கவில்லை ) அப்புற‌ம் பிரபு , பாவனா , யூகி சேதுவுடன் பிரான்ஸ் கிளம்புகிறார்.

பிரான்சில் கடும் போராட்டத்தின் பின் என்னத்துக்காக தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற மிகப்பெரிய இரகசியத்தை கண்டு பிடிக்கிறார். ( நமக்கு படம் தொடங்கி சிறிது நேரத்திலேயே அது தெரிந்து விடும் அது வேறு)

அப்புறமென்ன நம்ம தமிழ்சினிமா போர்முலாப்படி வில்லன்களை ( சகோதரர்களை ) வேட்டையாடுகிறார். பாவனாவை கைப்பிடிக்கிறார்.இதற்கிடையில் பாவனாவுடன் ஒரு டூயட் பாடி முடிக்கிறார். மொத்தத்தில் சமீராவும் பாவனாவும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். அஜித் கூட இருப்பவர்கள் அடிக்கும் ஜால்ரா சகிக்க முடியவில்லை.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அஜித் டான்ஸ் ஆடவில்லை. அஜித் இதை தொடர்ந்து கடைப்பிடித்தால் நல்லது.ஒளிப்பதிவாளர் புதியவர் என்றாலும் நன்றாக செய்திருக்கிறார். அவரை பாராட்டியே ஆகவேண்டும். அடுத்து சண்டைக்காட்சிகளும் பாடல்களும் நன்றாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

சரண் கட்டாயம் தன்னை மாற்றியாக வேண்டும். இல்லையேல் ரசிகர்கள் அவரை மறந்து விடுவார்கள்.

மொத்தத்தில் அசல் அஜித் ரசிகர்களுக்கான படம்.

அசல் அரைத்த மாவு



வேறு சில விமர்சனங்கள்.

அசல் – திரைப்பட விமர்சனம்

அசல்

அசல் ரசிகர்களுக்கு ஏமாற்றம்