இன்றைய ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதவுள்ளன.

கடந்த இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, இன்றும் தனது அசத்தலை தொடரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் மும்பை இன்று, வென்று, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற நினைக்கலாம்.
மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன் முதல் சுற்று போட்டிகள் முடிந்து, தற்போது இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இன்று சென்னையில் நடக்கும் 37வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சச்சினை கேப்டனாக கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

தொடருமா எழுச்சி?
தொடர்ச்சியான நான்கு தோல்விக்கு பின் எழுச்சி கண்ட சென்னை அணி, பேட்டிங் எழுச்சி பெற்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளை வென்றது. இன்றும் இது தொடரும் என நம்பலாம். இதற்கு, "அதிரடி' நாயகன் முரளி விஜய், ரெய்னா, தோனி மற்றும் மார்கல் உதவுவார்கள் என தெரிகிறது. தவிர, கடந்த சில போட்டிகளில் ஏமாற்றும் ஹைடன் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லையெனில் மைக்கேல் ஹசி, வாய்ப்பு பெறுவது உறுதி.

பவுலிங் நம்பிக்கை:
பவுலிங், பீல்டிங்கில் சொதப்புவது தான் சென்னை அணிக்கு பலவீனமாக உள்ளது. ஆனால் போலிஞ்சர் வரவால், தற்போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தவிர முரளிதரனும் அசத்துவதால், மும்பையின் ரன்குவிப்பை இவர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று தெரிகிறது. தவிர, மார்கல், ரெய்னாவும் ஆறுதல் தரலாம்.

சச்சின் பலம்:
கடந்த இரு தொடர்களில் இல்லாத வகையில், இம்முறை மும்பை அணி பெரும் எழுச்சி கண்டுள்ளது. இதற்கு சச்சினின் அசத்தலான "பார்ம்' மற்றும் இளம் வீரர்கள் எழுச்சியும் காரணம். தவிர, இன்று ஜெயசூர்யா, இதுவரை வாய்ப்பு பெறாத டுமினி ஆகியோர் களமிறங்கலாம். திவாரி, ராயுடு, சதீஷ் இன்றும் கலக்க காத்திருக்கிறார்கள்.

"பெஸ்ட்' பவுலிங்:
மும்பை அணியின் பவுலிங் பலம் வாய்ந்ததாக உள்ளது. ஜாகிர் கான், மெக்லாரென், மலிங்கா போன்றவர்கள் இத்தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அசத்துகிறார்கள். கடைசி நேரத்தில் கட்டுக்கோப்பாக பந்து வீசுவதில் வல்லவர்களான இவர்கள், எதிரணியின் ரன்குவிப்பை கட்டுப் படுத்துகின்றனர். சுழலில் ஹர்பஜன் மிரட்டல் தொடர்கிறது.

"டாஸ்' முக்கியம்:
"டுவென்டி-20' போட்டியில் "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், இன்று "டாஸ்' வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வது உறுதி. இருப்பினும், மும்பைக்கு எதிரான முதல் போட்டியில், முதலில் விளையாடிய சென்னை அணி, 180 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது. இதனால் இன்று கவனமாக விளையாடுவார்கள் என நம்பலாம்.

வெற்றி தேவை:
சென்னை அணி இதுவரை, பங்கேற்ற 9 போட்டிகளில் 4 ல் வெற்றி, 5ல் தோல்வி அடைந்துள்ளது. அடுத்த 5 போட்டிகளில் 4ல் கட்டாயம் வெற்றி பெற்றால் தான், அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது. ஆனால் மும்பை அணியை பொறுத்த வரையில், பங்கேற்ற 8 போட்டியில் 7ல் வென்றுள்ளது. அடுத்து 6ல் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே, அரையிறுதிக்குள் நுழைந்து விடும். இதனால் இன்றைய போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோனியா-சச்சினா?


இந்த முறை எப்படியும் கோப்பை வெல்வதில் மும்பை அணி உறுதியாக உள்ளது. இன்று சச்சினின் அணுகுமுறைக்கு வெற்றி கிட்டுமா? அல்லது அமைதியாக இருந்து, கடைசி நேரத்தில் ஏதாவது செய்து, திடீர் பிரமிப்பை ஏற்படுத்தும் தோனிக்கு வெற்றி கிடைக்குமா? என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, இன்றைய போட்டியை பார்க்க எவ்வளவு விலை கொடுத்தாதவது, டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என ரசிகர்கள் முயற்சிக்கின்றனர். இதனால் டிக்கெட் விலை மூன்று மடங்கு வரை அதிகமாக "பிளாக்கில்' விற்கப்படுகிறது. * பொதுவாக சென்னை, சிதம்பரம் மைதானத்தில் சென்னை அணிக்கு தான் அதிக ஆதரவு இருக்கும். ஆனால், இன்று சச்சினின் மும்பை அணி விளையாடுவதால், சென்னை அணிக்கு முழுமையான ஆதரவு கிடைப்பது சந்தேகமே. சென்னை வீரர்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில், ரசிகர்களின் அமோக ஆதரவை பெறலாம்.

0 comments