இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில்,​​ மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்,​​ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

சென்னையில் சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் அதிரடி சதம் அடித்து அசத்திய முரளி விஜய் இந்த ஆட்டத்திலும் அசத்துவார் என உள்ளூர் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,​​ அவர் 17 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

முரளி விஜய் ஆட்டமிழந்ததும் களம் கண்ட சுரேஷ் ரெய்னா 18 பந்துகளில் ஒரு சிக்சர்,​​ 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்தார்.​ பிராவோ பந்துவீச்சில் சிக்சர் விளாசிய ரெய்னா,​​ மீண்டும் ஒரு முறை சிக்சர் அடிக்க முற்பட்டு வெளியேறினார்.

ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே களம் இறங்கிய கேப்டன் தோனி 18 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.​ போலார்டு பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து தோனி ஆட்டமிழந்தார். ஒரு முனையில் நிதானமாக விளையாடிவந்த ஹேடன் 31 பந்துகளில் ஒரு சிக்சர்,​​ 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து போலார்டு பந்துவீச்சில் சதீஷிடம் கேட்ச் கொடுத்தார்.​

20 ஓவர்கள் முடிவில் சென்னை 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்திருந்தது.​ மைக் ஹசி 15 பந்துகளில் 14 ரன்களுடனும்,​​ பத்ரிநாத் 22 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை தொடங்கியது. அந்த அணியில் சச்சின் டெண்டுல்கர் தவிர ஒருவரும் நிலைத்து நின்று விளையாடவில்லை.​ சச்சின் 35 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் ஹர்பஜன் சிங் ஓரிரு சிக்சர்கள் விளாசியபோதும் அணியை வெற்றி பெற வைக்க இயலவில்லை.​ அவர் 23 பந்துகளில் 3 சிக்சர்,​​ 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் விளாசினார்.

சென்னை அணியின் அஸ்வின், ​​ துஷாரா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.​

இந்த வெற்றியின் மூலம் சென்னை 10 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது.​ இப்போட்டியில் மும்பை அணி பெற்ற 2-வது தோல்வியாகும் இது

0 comments