இந்தப் பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத் தலைப்புகளை தனுஷ் ரிசர்வ் செய்துவிட, அந்தப் பக்கம் புரட்சித் தலைவரின் படப் பெயர்களை விஜய் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

அவர் அடுத்த நடிக்கும் படத்துக்கு காவல்காரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளார். படப்பிடிப்பும் இன்று ஆரம்பித்துள்ளது.

குண்டடிபட்டு பேச முடியாமல் மருத்துவமனையிலிருந்த எம்ஜிஆர் மீண்டும் வருவாரா, படங்கள் நடிப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விரைவில் குணமடைந்து முன்னிலும் வேகத்தோடு நடித்துக் கொடுத்த படம் காவல்காரன். பெரிய ஹிட்!

இந்தத் தலைப்பைத்தான் விஜய் தனது 51வது படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே வேட்டைக்காரன் என்ற தலைப்பைப் பயன்படுத்தினார் விஜய். உரிமைக்குரல், மீனவ நண்பன், எங்கள் தங்கம் போன்ற படங்களின் பெயர்களையும் பதிவு செய்து வைத்துள்ளனர் விஜய்க்காக.

காவல்காரன் படத் தலைப்புக்காக சத்யா மூவீஸாருடன் பேசி அனுமதியும் வாங்கி விட்டனராம்.

மலையாளத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் தமிழாக்கம்தான் இந்த காவல்காரன். விஜய்க்கு இதில் ஜோடி அசின். இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.

வடிவேலு படம் முழுக்க விஜய்யுடன் வருகிறார். காரணம் அவருக்கு விஜய்யைக் கண்காணிக்கும் வேடமாம்!

ராஜ்கிரண் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கிறார். படத்தில் இவரது மகளான அசினுக்குதான் பாடிகார்டாக வருகிறார் விஜய். மீதிக் கதையும் காட்சிகளும் உங்களுக்கே தெரிகிறதல்லவா...!

0 comments