துவக்க ஆட்டக்காரர் நமன் ஓஜாவின் அபார ஆட்டத்தாலும், ஷான் வாட்சனின் அதிரடி ஆட்டத்தினாலும் சிறப்பாக ரன்களைக் குவித்த இராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இறுதிக் கட்டத்தில் அடுத்ததடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் தோல்வியைத் தழுவியது.

சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் சற்று முன் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் இராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனைப் படைத்த 246 ரன்களைக் கடந்து வெல்ல வேண்டும் என்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இராஜஸ்தான் ராயல்ஸிற்கு மைக்கேல் லாம்ப், நமன் ஓஜா சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். முதல் 5 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தனர். 7.2 ஓவர்களில் 69 ரன்களை எட்டியிருந்த நிலையில் லாம்ப் 37 (4 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர்) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து ஆட வந்த அதிரடி மன்னன் யூசுஃப் பத்தான், சந்தித்த முதல் பந்தையே பெளண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்தை தூக்கியடிக்க, அது சிக்ஸர் ஆகியிருக்கும். ஆனால், போலிங்கர் நம்பமுடியாத வகையில் அதனை பிடிக்க, நிலை தவறி அவர் பெளண்டரிக் கோட்டிற்கு வெளியே விழ நேர்ந்தபோதும், பந்தை மேலே எறிந்துவிட்டு, பிறகு மீண்டும் கோட்டிற்குள் வந்து பந்தைப் பிடித்து பத்தானை ஆட்டமிழக்கச் செய்தார். இன்றைய போட்டியின் அபார தருணம் இது.

அடுத்து ஆட வந்த ஷான் வாட்சன் ஓஜாவுடன் இணைந்து மின்னல் வேகத்தில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

தீர்ந்தது சென்னை அணி என்று கருதும் அளவிற்கு இவர்கள் இருவரும் நடத்திய அதிரடிக் கச்சேரி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முரளிதரனின் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்து ரன் எண்ணிக்கையை உயர்த்தினார் வாட்சன். இவர்கள் இருவரும் இராஜஸ்தான் அணியின் எண்ணிக்கையை 15வது ஓவரின் முடிவில் 175 ரன்களுக்கு உயர்த்தினர்!

அபாரமாக ஆடிய வாட்சனை வீழ்த்தினார் போலிங்கர். 25 பந்துகளில் 5 பெளண்டரிகளுடனும், 5 சிக்ஸர்களுடனும் 60 ரன்களைக் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார் வாட்சன்.

மறுமுனையில் மிகச் சிறப்பாக ஆடி சிக்ஸர்களாகவும், பெளண்டரிகளாகவும் பறக்கவிட்டார் ஓஜா. ஆனால் அடுத்து ஆடவந்த ஃபைஸ் ஃபசாலும், அபிஷேக் ஜூன்ஜூன்வாலாவும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இராஜஸ்தானின் ரன் குவிக்கும் வேகம் தடைபட்டது. அதுவே அந்த அணிக்கு தோல்வியாகவும் முடிந்தது. அதுவரை சென்னை அணிக்கு இணையாக ரன் வேகத்தை கூட்டிய இராஜஸ்தான், இறுதி கட்டத்தில் முடங்கியது. போலிங்கரின் சமயோசித பந்து வீச்சும் அதற்கு காரணமாக அமைந்தது.

20 ஓவர்களின் முடிவில் இராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களை எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஓஜா 55 பந்துகளை எதிர்கொண்டு 8 பெளண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் எடுத்திருந்தார். மிகச் சிறப்பான ஆட்டம் இது. முரளி விஜய் ஆடிய ஆட்டத்திற்கு சற்றும் குறையாத சிறப்புடையது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த வெற்றிக்குக் காரணம் டக் போலிங்கரின் சிறப்பான பந்து வீச்சாகும். 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்க்கல் 4 ஓவர்களில் 56 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகமான சிக்ஸர்களை அடித்ததற்கு சிறப்பு விருதும், ஆட்ட நாயகன் விருதும் முரளி விஜய் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 4வது இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் உயர்ந்துள்ளது. இராஜஸ்தான் 6வது இடத்திற்கு இறங்கியுள்ளது.

0 comments