சென்னை வீரர் முரளி விஜய் அதிரடியாக எடுத்த சதமும், மூன்றாவது விக்கெட்டிற்கு மார்க்கலுடன் சேர்ந்து 64 பந்துகளில் எடுத்த 152 ரன்களும் சென்னை சூப்பர் சிங்ஸ் அணியை ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உதவின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில், இராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முரளி விஜய் - மேத்யூ ஹைடன் இணை அதிரடித் துவக்கத்தைத் தந்தது.

மேத்யூ ஹைடன் 21 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஆட வந்த சுரேஷ் ரெய்னா 7 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடு்த்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் முரளி விஜய் சிக்ஸர்களும் பெளண்டரிகளும் அடித்து அணியின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்த்தினால். அவருடன் இணை சேர்ந்த மார்க்கலும் அதிரடியாக ஆடினார்.

இவர்கள் இருவரும் இணைந்து 64 பந்துகளில் 152 ரன்களைக் குவித்து சாதனை படைத்தனர். மார்க்கல் 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முரளி விஜயின் ஆட்டத்தில் நெருப்பு பறந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரி்ல் ஆட்டமிழந்த விஜய், வெறும் 56 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 127 ரன்களைக் குவித்தார்!

விஜயின் அதிரடி ஆட்டத்தால் கடைசி 10 ஒவர்களில் மட்டும் 157 ரன்களைக் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஒவர்களில் 246 ரன்களை எட்டியது. இது ஐபிஎல் போட்டிகளில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதில் 17 சிக்ஸர்களும் 19 பெளண்டரிகளும் அடக்கம்.

கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆஸி. பந்து வீச்சாளர் வாட்சன் 4 ஓவர்களில் 47 ரன்களைக் கொடுத்துள்ளார்.

இன்று விஜய் ஆடிய ஆட்டம் சென்னை ரசிகர்களால் மட்டுமின்றி, தொலைக்காட்சியில் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் நீ்ண்ட காலம் நினைத்து நிற்கும்.

0 comments