ரசிகர்களை கேளிக்கைப்படுத்தும் படங்களுக்கு மத்தியில் கேள்வி கேட்பது மாதி‌ரி எப்போதாவதுதான் ஒரு படம் வரும். வசந்தபாலனின் அங்காடித்தெரு அப்படியொரு குறிஞ்சி. முதலிலேயே சொல்லிவிடுகிறோம்.. கலாபூர்வமான குறைபாடுகள் சில அங்காடித்தெருவில் இருக்கலாம். ஆனால், வசந்தபாலன் எடுத்துக் கொண்டிருக்கும் கதைக்களத்துக்கு முன்னால் அது ஒரு விஷயமேயில்லை.


மழைக்குப் பிந்தைய சென்னையின் இரவு. இளம் காதலர்களான ஜோதி லிங்கமும் சேர்மக்கனியும் (மகேஷ் - அஞ்சலி) இரவை கழிக்க வேறு இடமில்லாமல் நடைபாதையில் ஒதுங்குகிறார்கள். மகிழ்ச்சியுடன் உறங்கத் தயாராகும் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது அந்த கோர விபத்து. இளமையின் விளிம்பில் நிற்கும் அவர்களை நடைபாதையின் இருளுக்கு துரத்தியடித்தது எது?

பிளாஷ்பேக்கில் வி‌ரிகிறது லிங்கத்தின் கதை. அது கதையல்ல... பெரும் வர்த்தக நிறுவனங்களின் பளபள பகட்டுக்கு பின்னாலுள்ள மனித சுரண்டல் கசடுகள்.

வறட்சியின் பிடியில் இருக்கும் தென்னக கிராமங்களிலிருந்து சென்னை ரங்கநாதன் தெருவிலுள்ள கடைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்பா இல்லாதவன், அக்கா, தங்கை உள்ளவனா செலக்ட் பண்ணு என்று சொல்லும்போதே திறந்துவிடுகிறது வர்க்கச் சுரண்டலுக்கான வாசல்.

விபத்தில் அப்பாவை பறிகொடுத்த ஜோதி லிங்கமும் இந்த ஜோதியில் ஒருவன். அவனுக்கு துணையாக நண்பன் பிளாக் பாண்டி. பத்து மாடி கடையில் வேலை என்று ஆர்வத்துடன் வருகிறவர்களை பத்தே வினாடியில் பதற வைக்கிறது அதிகாரத்தின் அடக்குமுறை.

உங்க யூனிஃபார்மை போட நாங்க எதுக்கு காசு தரணும் என அப்பாவியாக கேட்பவனுக்கு அப்போதே கன்னத்தில் பதில் கிடைக்கிறது. 12 மணி நேரத்துக்கு மேல் வேலை, பன்றிக்கூடம் மாதி‌ரி ஒரு சாப்பாட்டு அறை, அதில் அடித்துப் பிடித்து சாப்பிட்டு வந்தால் தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் சம்பளத்தில் பிடித்தம், ஆண் என்றால் மிருகத்தனமான அடி, பெண் என்றால் கூடுதலாக பாலியல் பலாத்காரம்... வர்த்தக நிறுவனங்களின் இரக்கமற்ற இதயத்தை தேடித் தேடி படமாக்கியிருக்கிறார் வசந்தபாலன்.

மூச்சுத் திணறும் இந்த சூழலில் லிங்கத்துக்கு கனி மீது காதல் மொட்டவிழ்வது கவிதை. பாலியல் ஈர்ப்பாக இல்லாமல் பரஸ்பரம் தோள் கொடுப்பதாக இருக்கிறது இந்த உறவு. இந்த‌க் காதல் கடை அண்ணாச்சியின் (பழ.கருப்பையா)கவனத்துக்கு வர, அரங்கேறுகிறது உச்சபட்ச வன்முறை. சொந்த முயற்சியில் வாழலாம் என கடையிலிருந்து வெளியேறுகிறார்கள் இருவரும். சுதந்திரத்தை சுவாசித்த இரண்டாவது நாளில்தான் நடக்கிறது அந்த விபத்து. சோகத்தின் இறுதியிலும் நம்பிக்கையின் தளிரை படரவிட்டு முடிகிறது படம்.

நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் ஏலச்சீட்டு நடத்தும் கனி கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்துகிறார் அஞ்சலி. அகலமான கண்களில் உணர்ச்சியின் பிரவாகம். குடும்பத்துக்காக மகேஷ் தன்னை விலக்கும் போது கோபித்துக் கொள்வதும், வயதுக்கு வந்த தங்கைக்கு சடங்கு செய்ய முடியாமல் புலம்புவதும் சிறப்பித்து சொல்ல வேண்டிய இடங்கள்.


அப்பாவி கிராமத்து இளைஞனாக மகேஷ் கச்சிதம். அஞ்சலியை கொடுமைப்படுத்தும் சூப்பர்வைசர் (வெங்கடேஷ்) மீது வெறிகொண்டு பாயும்போது திரையரங்கே ஆர்ப்ப‌ரிக்கிறது. சூப்பர்வைசர் எனும் குட்டி முதலாளிகளின் ஒட்டுமொத்த உருவமாக வருகிறார் வெங்கடேஷ். முட்டை கண்ணும் பட்டை கண்ணாடியுமாக அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் என்ன செய்யப் போகிறாரோ என திணறுகிறது திரையரங்கு. இடையில் வந்து போகும் சக தொழிலாளியின் காதலும், தற்கொலையும் கூட மனசை பிசைகிறது.

கண் தெ‌ரியாத பாய், குள்ள மனிதனுக்கு வாழ்க்கைப்பட்ட முன்னாள் பாலியல் தொழிலாளி, அசுத்தமான கழிப்பறையை கழுவி கட்டண கழிப்பிடமாக்கும் இளைஞன் என கடைக்கு வெளியே வசந்தபாலன் காட்சிப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு வாழ்க்கையும் ஹைக்கூ. இந்த உதி‌ரிப்பூக்கள்தான் அங்காடித்தெருவை முழுமைப்படுத்துகிறது.

மகேஷ் சென்னைக்கு வரும் காட்சி, கழிப்பறை இளைஞன் காஸ்ட்லி ட்ரெஸ்ஸில் ரயிலில் வந்திறங்குவது என்று ஓ‌ரிரு இடங்களில் மட்டுமே பின்னணி இசை சிறப்பு சேர்த்திருக்கிறது. மற்ற இடங்கள் மிகச் சாதாரணம். கதையோடு பொருந்தி வருகின்றன அவள் அப்படியொன்றும் அழகில்லை, உன் பெயரை சொல்லும் போதே பாடல்கள். மற்றப் பாடல்கள் இல்லையென்றாலும் பாதகமிருந்திருக்காது படத்துக்கு.

இறுக்கமான கதைக்கு பொருத்தமான ஒளிப்பதிவு. குறிப்பாக சென்னையின் இரவுக் காட்சிகள். ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், கலை இயக்குன‌ரின் பங்களிப்பு என அனைத்துமே நிறைவு. ஜெயமோகனின் வசனங்கள் படு இயல்பு. விக்க‌த் தெ‌ரிந்தவன்தான் வாழத் தெ‌ரிந்தவன் என்பது போன்ற தத்துவ தெறிப்புகளும் உண்டு. வாடிக்கையாளர்கள் வருவதற்கு முந்தைய அதிகாலை ரங்கநாதன் தெருவும், அவர்கள் நீங்கிய பிறகான பின்னிரவு தெருவும் இயக்குன‌ரின் உழைப்பு எத்தகையது என்பதை உணர்த்துகின்றன.

நாடு ஒளிர்வதாக சொல்லும் அதிகாரவர்க்கம், அம்பானி போன்ற ஓ‌ரிருவர் பணக்கார பட்டியலில் இடம்பெறும் போது இந்தியா உயர்ந்துவிட்டதாக பெருமை பேசும் அரசியல்வாதிகள், வல்லரசாகிவிட்டோம் என வீம்பு கொள்ளும் கனவான்கள் எல்லோர் மீதும் காறி உமிழ்ந்திருக்கிறது அங்காடித்தெரு. எப்படி துடைத்தெறியப் போகிறோம் இதை?

0 comments