உலக அழகி ஐஸ்வர்யாராய் சென்னைக்கு வருவது இது முதல் முறையல்ல. ஆனால் இதே சென்னையில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை! இடம் சத்யம் திரையரங்கம் படம்- ரெட்டச்சுழி.


மீடியாக்களின் தள்ளுமுள்ளு, பார்வையாளர்களின் பாய்ச்சல் இவற்றுக்கு நடுவிலும் தனது மாறாத புன்னகையோடு விழாவை கவுரவித்தார் ஐஸ்வர்யாராய். வேதனை என்னவென்றால் அரங்கத்திற்குள் நுழைந்தவரை அமர வைக்க ஒரு நாற்காலி கூட காலியாக இல்லை. வந்திருந்த மொத்த கூட்டமும் அவரை பார்க்கதான் வந்திருந்தது. ஆனால் அவருக்காக ஒரு நாற்காலியை காலி செய்து தருகிற மனசு முன்வரிசை புண்ணியவான்களுக்கு இல்லவே இல்லை. சிறிது நேரம் காத்திருந்த ஐஸ்சுக்கு நல்ல வேளையாக சேர் ஒன்று காலி செய்து தரப்பட்டது. (படம் ஓடும் நாட்களில் இந்த சேரில் அமர பத்து ரூபாய் டிக்கெட் வாங்கினால் போதுமானது)

ஒருவழியாக மேடையேறிய ஐஸ்வர்யாராய் பாரதிராஜா, பாலசந்தர் போன்ற ஜாம்பவான்கள் பேசிவிட்டு வரும்போது எழுந்து நின்று வணங்கியது வியப்போ வியப்பு. விழாவில் பேசிய அத்தனை பேரும் அவரது அழகை வர்ணிக்க தவறவில்லை. ஷங்கரின் பேச்சில் ததும்பி வழிந்தது நன்றி. ஜீன்ஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கே அவங்க வரல. ஆனா இந்த படத்தை பற்றியும் இது எந்த மாதிரி படம் என்பது பற்றியும் அவங்களுக்கு சொன்னோம். அதன்பின் வர சம்மதிச்சாங்க. அவங்க உலக அழகியா இருந்தாலும், தனது தொழிலில் அர்பணிப்புள்ள ஒரு அற்புதமான நடிகை. எந்திரன் படப்பிடிப்புக்காக சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள மாச்சி பூச்சி என்ற இடத்துக்கு போயிருந்தோம்.

பல மணிநேர பயணம். பாதைகளும் சீரா இல்லை. எல்லாரும் டயர்டா ஆயிட்டோம். ஒருவழியா நாங்க போய் சேர்ந்த இடத்துக்கு அப்புறமா வந்து சேர்ந்தாங்க ஐஸ்வர்யா. அந்த இடத்தோட அழகை பார்த்திட்டு 'சினிமாவில் இருக்கறதாலதானே இப்படிப்பட்ட இடத்தையெல்லாம் பார்க்க முடியுது' என்று சந்தோஷப்பட்டாங்க. இங்கிருக்கிற கொசுவை விட பல மடங்கு விஷமுள்ள பூச்சிகள் அங்க இருந்தது. அது கடிச்சா அந்த இடத்தில தழும்பு மறையவே சில வாரங்கள் ஆகும். அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு நடிச்சு கொடுத்தாங்க என்றார்.

இதே விழாவில் பேசிய பாலசந்தர் கூட ஐஸ்வர்யாவின் அழகை கண்டு தடுமாறினார். டிரெய்லர் பார்க்கலாம்னு சந்தோஷத்தோட வந்தேன். ஐஸ்வர்யாராய்க்கு பக்கத்து சீட்டை எனக்கு கொடுத்து சந்தோஷத்தை இரட்டிப்பாக்கிட்டாங்க. இந்த கிழவனுக்கு ஏன் இந்த ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்கலாம். தப்பில்ல. ஆராதிக்கறதோட விட்டுறணும் என்றார்.

0 comments