நடிகர் கவுண்டமணிக்கு நெஞ்சு வலி என்று வந்த செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர் நலமுடன் உள்ளதாகவும் அவர் மனைவி கூறியுள்ளார்.

'காமெடி கிங்' எனப் புகழப்படும் நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள், செய்தியாளர்கள் மற்றும் திரையுலகினர் திகைத்துப் போய் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர்.

விசாரித்ததில், அவரது கழுத்துப் பட்டை தேய்ந்து வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு வந்ததாகவும், மற்றபடி நலமுடன் இருப்பதாகத் தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், "அவருக்கு நெஞ்சு வலி வந்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. கழுத்து எலும்பு தேய்மானம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இப்போது சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் உள்ளார். ஒன்றும் பிரச்சனையில்லை.." என்றார்.

பொதுவாக நிகழ்ச்சிகளில் கூட தலை காட்டுவதை விரும்பாதவர் கவுண்டமணி. பத்திரிகையாளர்களிடம் நல்ல முறையில் பழகினாலும், தனது பேட்டியோ, செய்தியோ வரவேண்டாம் என்பார்.

ஆனால் சமீப காலமாகத்தான் திரையுலகம் தொடர்பான விழாக்களில் பங்கேற்கிறார். சமீபத்தில் முதல்வருக்கு ஃபெப்ஸி நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்று தொடர்ச்சியாக காமெடி செய்து கலக்கினார் கவுண்டர். இவர் நடிப்புக்காக மட்டுமே சரத்குமாரின் ஜக்குபாய் பார்த்தவர்களே அதிகம்.

0 comments