நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோவில் இடம் பெற்றிருப்பது சுவாமி நித்தியானந்தா இல்லை என்று அவரது மடம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக நேற்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நித்தியானந்தாவின் ஆசிரமம் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதில், நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோக்களையும், படங்களையும் பிரசுரிக்க பத்திரிகைகளுக்கு தடை விதிக்கக் கோரப்பட்டது.

அந்த மனுவில், எனக்கு 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் உள்ளனர். இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உள்ளிட்டவற்றை அளித்து வருகிறேன்.

இந்த நிலையில், எனது மடத்தில் புகுந்து விட்ட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்பவர்தான் எனது புகழைக் கெடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகையுடன் நான் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை சன் டிவி திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகிறது.

அதில் இருப்பது நான் அல்ல. எனவே இந்த வீடியோவையும், புகைப்படங்களையும் சன் டிவி, தினகரன், தமிழ் முரசு, நக்கீரன் ஆகியோர் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி மாணிக்கவாசகர், தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், வழக்கை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைத்த அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

நித்தியானந்தாவின் ஆசிரமம் விளக்கம்...

இதற்கிடையே, நித்தியானந்தாவின் ஆசிரம இணையதளம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், எங்களுக்கு எதிராக நடந்த கூட்டுச் சதி, கிராபிக்ஸ் வேலைகள், வதந்திகள் ஆகியவைதான் இந்த செய்திகளின் பின்னணியில் உள்ளதாக கருதுகிறோம்.

இதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்குத் தயாராகி வருகிறோம்.

சுவாமிஜியின் அருள் பெற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து சுவாமிஜி மீது அன்புடன் உள்ளனர். இதற்கு மேல் இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை.

இருப்பினும், இந்த சிக்கலான நேரத்தி்ல் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிஜியின் பின் நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

0 comments