தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2010 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று முற்பகல் 11மணியளவில் யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டிருந்தனர்.

தேர்தல் விஞ்ஞாபனம் - 2010

இலங்கைத் தீவில் தமிழ் தேசிய இனம்

பதினாறாம் நூற்றாண்டில் மேற்கத்தேய வல்லரசுகளின் வருகைக்கு முன்னதாக இலங்கைத் தீவிலே மூன்று இராஜதானிகள் இருந்தன. அவற்றில் ஒன்று வடக்கிலே தமிழருக்குச் சொந்தமாக இருந்தது. மத்திய மலையகத்திலே இருந்த கண்டி இராச்சியம் தான் கடைசியானதாக 1815ல் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்தது. 1833ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக இந்த மூன்று இராஜதானிகளையும் பிரித்தானியர் ஒன்றிணைத்தனர். அன்றிலிருந்து இலங்கை ஒரே நிலப்பரப்பாக ஆளப்பட்டது. 1948ஆம் ஆண்டு காலனித்துவ ஆளுகையிலிருந்து சுதந்திரம் பெற்ற வேளையில் சாதாரண பெரும்பான்மைத்துவம் கொண்ட ஒற்றை ஆட்சித் தன்மையான அரசியல் அமைப்பு ஒன்று இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த அரசியல் அமைப்பின் 29(2) உறுப்புரையில் குறித்ததொரு சமூகத்தையோ சமயத்தையோ பாதிக்கின்ற அல்லது மட்டுப்படுத்துகின்ற சட்டமோ அல்லது குறித்த ஒரு சமூகத்துக்கோ சமயத்துக்கோ மற்றவர்களுக்கு இல்லாத சலுகையை கொடுக்கும் சட்டத்தையோ நிறைவேற்றக்கூடாதென்ற தடைவிதிக்கப்பட்டது.

சமஷ்டி அரசியல் அமைப்பிற்கான கோரிக்கை

1949 ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களில் கணிசமானோருடைய குடியுரிமை பறிக்கப்பட்டதுடன் சிங்களம் மாத்திரம் அரச கரும மொழியாக மாற்றப்பட்டது. 29(2) உறுப்புரை இப்படியானவற்றை தடுப்பதற்காக இயற்றப்பட்டிருந்தாலும் கூட இந்த சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இது அதுவரை காலமும் இருந்த அரசாங்க கொள்கைக்கு மாறான செயலுமாகும். இந்த கால கட்டத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வட, கிழக்கு பிரதேசங்களில் அந்த பிரதேசங்களில் குடிசனப் பரம்பலை மாற்றியமைக்கும் விதத்தில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் முழு மூச்சோடு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்தப் பின்னணியில் இலங்கைத் தமிழ் மக்கள் சிங்களவரிடம் இருந்து பிறிதொரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை 1951 ஏப்ரல் மாதத்தில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி எடுத்தியம்பியது. இந்த சுயநிர்ணய உரிமையின் வெளிப்பாடாக தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் ஒரு சமஷ்டி முறையான ஆட்சியை தமிழரசுக்கட்சி வலியுறுத்தியது. ஆரம்பத்தில் வெளிநாட்டுப் படையெடுப்புக்களினாலும் பின்னர் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத பெரும்பான்மையினரின் மேலாதிக்க வாதத்தை உறுதி செய்யும் அரச முறை ஒன்றின் மூலம் தமிழ் மக்கள் இழந்து விட்ட சுயநிர்ணய உரிமையை திரும்பவும் வென்றெடுப்பதற்காக 1950 களிலிருந்து 1960 களின் இறுதிவரை தமிழ் அரசுக்கட்சி பல அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது.

பண்டா – செல்வா ஒப்பந்தம்.

அரச கரும மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் இலங்கையின் பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்காவிற்கும் தமிழ் மக்களின் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கும் இடையில் 1957 ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அரச காணிகளுக்கு மேலான தனி அதிகாரத்தையும் மற்ற அரச அதிகாரங்களையும் பிரதேச சபைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்தது. ஆனால் பெரும்பான்மை சமூகத்தினர் இதனை எதிர்க்கிறார்கள் என்று காரணம் காட்டி பண்டாரநாயக்கா இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தவில்லை.

டட்லி – செல்வா ஒப்பந்தம்.

பின்னர் 1960 ம் ஆண்டில் வடக்கு கிழக்கு குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதை தடை செய்யும் வகையில் அரச காணி பகிர்ந்தளிப்பதற்கான கொள்கைகளை உள்ளடக்கி சுயாட்சியை ஏற்படுத்துகின்ற ஒப்பந்தம் ஒன்று தமிழ் தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகத்திற்கும் பிரதமர் டட்லி சேனநாயக்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் 1965 ம் ஆண்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அமைச்சரவையில் இணைந்து கொண்டது. ஆனால் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்ற காரணத்தாலும் சுயாட்சியை ஏற்படுத்த அரசு முயற்சிக்கவில்லை என்ற காரணத்தாலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டது.

அரச குடியேற்றங்கள்

வடக்கு கிழக்கை தங்களுக்கு பாரம்பரிய தாயகமாகவும் அதிலே தமது சுயநிர்ணய உரிமையை உடையதாகவும் கருதுகின்ற எமது மக்கள், இலங்கை சுதந்திரம் அடைந்த பின் வடக்கு கிழக்கின் குடிசனப் பரம்பலை பாதிக்கும் வகையிலான அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினால் பெரிதும் பாதிப்படைந்தனர். 1940 களுக்கும் 1980 களுக்கும் இடைப்பட்ட காலத்தில் அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களினால் அரச காணி பகிர்ந்தளிக்கின்ற கொள்கையினாலும் குடிசனப் பரம்பல் வீதம் பாரியளவில் மாற்றம் அடைந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது கிழக்கு மாகாணத்தில் 9 வீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 1981ஆம் ஆண்டு கடைசியாக நடைபெற்ற குடிசன மதிப்பீட்டின்படி 25 வீதமாக உயர்ந்திருந்தது. அதே சமயம் 1947ற்கும் 1981ற்கும் இடைப்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் சிங்கள மக்களின் சனத்தொகை 238மூ ஆக உயர்ந்த வேளையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் சிங்கள மக்களின் சனத்தொகை 883மூ ஆக அதிகரித்தது. வடக்கு கிழக்கின் குடிசனப்பரம்பலை இவ்விதமாக மாற்றும் அரசின் நிகழ்ச்சி நிரல் முழுத் தீவிரமாக இன்று வரை நடைபெற்று வருகின்றது.

கடந்த 60 ஆண்டு காலமாக வடக்கு கிழக்கில் புதிதாகக் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கான நீர்ப்பாசன திட்டங்கள் தவிர வேறு எந்தவிதமான முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களும் எந்த ஒரு அரசாங்கத்தினாலும் முன்னெடுக்கப்படவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரான காலப்பகுதியில் எமது மக்களும் எமது நிலமும் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டன.

குடியரசு அரசியலமைப்பு உருவாகத்தில் தமிழ் மக்கள் பங்குபற்றாமை

1970 ம் ஆண்டு இலங்கைக்கு இலங்கை மக்களே உருவாக்குகின்ற அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதற்காக அரசியல் யாப்பு நிர்ணயசபை ஒன்று கூட்டப்பட்டது. இதிலே தமிழரசுக் கட்சியும் ஆரம்பத்தில் பங்குபற்றி சமஷ்டி ஆட்சி அடிப்படையிலான சில கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியது. ஆனால் அந்த பிரேரணைகள் யாவும் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டபோது தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அந்த அரசியல் யாப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேறினர். அதைப் போலவே 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கும் தமிழ் மக்கள் தமது ஒப்புதலை வழங்கவில்லை. முதலாம் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்புக்கள் இரண்டும் ஒற்றையாட்சி முறையை உறுதிப்படுத்தி சிங்கள மொழிக்கு மட்டும் அரச கரும மொழி என்ற அந்தஸ்த்தையும் பௌத்த மதத்திற்கே முதலிடம் என்ற அந்தஸ்த்தையும் கொடுத்தன. சோல்பரி அரசியல் யாப்பில் 29(2) இல் சிறுபான்மை மதங்களுக்கும் மக்களுக்கும் எதிராக சட்டம் இயற்றக்கூடாது என்ற தடையையும் இந்த அரசியல் யாப்பு நீக்கியது. ஆகவே 1972ஆம் 1978ஆம் அரசியல் யாப்புக்கள் தமிழ் மக்களின் ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டதாகும்.

தரப்படுத்தல்

பல்கலைக்கழக அனுமதிகளைத் தரப்படுத்தும் திட்டமொன்று அறிமுகப்படுத் தப்பட்டதன் மூலம் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாமலும் அவர்களை விட குறைந்த புள்ளிகளைப் பெற்ற சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறவும் வழிவகுக்கப்பட்டது. இது தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதை தடுத்து அவர்களுடைய விரக்தியை அதிகரித்தது. 1970 ம் ஆண்டுகளில் இதற்கெதிராக அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்ட 40 ற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவசர காலச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணையின்றி சில வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள்

தமிழ் மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட பாரபட்ச நடவடிக்கைகளுக்கும் மற்ற அநீதிகளுக்கும் மேலாக 1956, 1958, 1961, 1977, 1981, 1983ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்டன. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. இந்த சந்தர்ப்பங்களில் நாட்டின் மற்றப் பாகங்களில் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களை அரசாங்கம் கப்பல்களில் ஏற்றி வடக்கு கிழக்குக்கு அனுப்பியதன் மூலம் இந்த இரு மாகாணங்களும் எமது பாரம்பரிய தாயகம் என்பதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் மேற்கண்ட நடவடிக்கையின் விளைவாக அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும் தமிழ் மக்கள் இழந்துவிட்ட இறையாண்மையை மீண்டும் வென்றெடுப்பதற்காகவும் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்தனர்.

இழந்துபோன இறையாண்மையை மீட்டெடுப்பதற்கான அழைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஏனைய தமிழ் கட்சிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்து 1976 ம் ஆண்டிலே இழந்த எமது இறையாண்மையை மீளப் பெறவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். இது 1956 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் கொடுத்த ஜனநாயக ஆணையை அரசு புறக்கணித்ததாலும் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை தொடர்ச்சியாக மறுத்து வந்தமையாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாகும். சிங்கள அரசாங்கங்களுக்கும் தமிழ் தலைவர்களுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் கூட மதிக்கப்படவில்லை. தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறையும் பாராபட்சமும் எந்தவிதமான கட்டுப்பாடின்றி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுவந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 1977 யூலை மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இழந்து போன இறையாண்மையை மீளப் பெறுவதற்கான ஆணையை தமிழ் மக்களிடம் கோரியிருந்தது. அந்த தேர்தலிலே வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஒன்றைத் தவிர மற்ற எல்லாத் தொகுதிகளிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி வெற்றியீட்டியது.

அதிகாரத்தை பகிர்வதற்கான ஒழுங்குமுறைகள்

1983ஆம் ஆண்டு தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்குப் பின்னர் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென்று தமிழ் பேசும் மக்களுக்கு கூடிய சுயாட்சி வழங்குகின்றதோர் மாற்று அரசியல் திட்டத்தினூடாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்பட்டன. 1987 ம் ஆண்டு ஏற்படுத்திய இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரதிபலனாக வடக்கு கிழக்கை ஒரு மாகாணமாக ஒன்றிணைத்து ஒரு அரசியல் நிர்வாக அலகு தோற்றுவிக்கப்பட்டது. மிகக் குறைந்த அளவிலான அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைகள் உருவாக்கப்படுவதற்கு இந்த மாற்றங்கள் வழிவகுத்தன. ஆனால் இந்த நாடு ஒற்றையாட்சி முறையின் கீழேயே தொடர்ந்தும் இருந்தது. அத்தோடு அதிகாரங்களைப் பகிரவந்த 13வது திருத்தச்சட்டம் மத்திக்கான அதிகாரங்களை மீளப் பெற்றுக்கொள்ள பயன்படுத்தப்பட்டது. அர்த்தமுள்ள விதத்தில் அதிகாரத்தைப் பகிர்வதற்கு இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.

ஒற்றையாட்சி முறையை இல்லாதொழித்தல் பகிர்ந்தனுபவிக்கும் இறைமை.

1995 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசாங்கம் அரசியல் சாசனத்திற்காக ஒரு தொகுதி பிரேரணைகளை அறிவித்தது. இலங்கை ஒரு பல மொழி பல மதங்களைக் கொண்ட பன்மத்துவ சமூகம் என்ற அடிப்படையில் ஐக்கியப்பட்ட நாட்டிற்குள் ஒரு அரசியல் வரைவை பிரிக்கப்பட முடியாத பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் 1996 ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கம் வெளியிட்டது. 2000 ம் ஆண்டு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்தின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை என்பது அகற்றப்பட்டு அரசியல் அதிகாரங்களைப் பொறுத்தவரையில் பகிரப்பட்ட இறையாண்மை என்ற அடிப்படை முன் வைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தை

எரிந்து கொண்டிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எந்த முன்னேற்றமும் ஏற்படாத அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் பல்வேறுபட்ட ஆயுதமேந்திய இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுதிலும் கூட 1987இலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தனிநாட்டுக்காகப் போராடும் ஒரேயொரு ஆயுதமேந்திய இயக்கமாக பரிணமித்தது. ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தின. 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் ஒரு யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதோடு பின்னர் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பிரகாரம் ஒஸ்லோ உடன்பாடு என்ற பெயரில் இரு தரப்பினரும் சில அடிப்படைக் கொள்கை விதிகளை ஏற்றுக் கொண்டனர்.

அது பின்வருமாறு:

உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலமைந்த வாழ்விடப் பிரதேசங்களில் சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசியல் தீர்வொன்றை ஐக்கிய இலங்கைக்குள் கண்டெடுப்பதற்கும் பரிசீலனை செய்யப்படுதல் வேண்டும்.

இராணுவத் தாக்குதல்களும் அதன் பின் விளைவுகளும்

இந்தப் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படாமல் அரசாங்க இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போராட்டம் திரும்பவும் ஆரம்பமாகி 2009 மே மாதம் 19ம் திகதியோடு அனைத்து இராணுவ மோதல்களும் முடிவுக்கு வந்தன. இந்த 30 வருட போராட்ட காலம் தமிழ் தாயகத்தையும் தமிழ் மக்களையும் முற்று முழுதாக சூறையாடி ஏதுமற்ற ஏதிலிகளாக்கியுள்ளது. பத்து இலட்சம் தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தும், இன்னொரு ஐந்து இலட்சம் மக்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த போராட்ட காலத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராணுவத் தாக்குதலில் கடைசிக் கட்டங்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சர்வதேச நிறுவனங்களினாலேயே மதிப்பிடப்பட்டுள்ளது. வேறு பலர் அங்கங்களை இழந்தும் பாரதூரமான காயங்களிற்குள்ளாகியும் மன உளைச்சல்களிற்குள்ளாகியும் துன்பப்படுகின்றனர். இதைவிட வன்னியில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வீடு வாசல் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தும் பின்னர் எல்லா முறைமைகளையும் மீறி தடுப்பு முகாம்களில் கைதிகளாக அடைக்கப்பட்டுமிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இன்னமும் இந்த முகாம்களிலே கைதிகளாக வாழ்கின்றனர்.

பதினோராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் வேறாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். விடுவிக்கப்பட்ட மற்றவர்களை எந்தவித நிவாரணமோ வாழ்வாதாரமோ இன்றி தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுமாறு விடப்பட்டுள்ளனர். தங்களுடைய என்று சொல்லிப் போக வீடொன்று கூட அவர்களுக்கு கிடையாது. இந்த மக்களுடைய திட்டவட்ட மீள்குடியேற்றமும் புனர்வாழ்வும் எமது தாயகத்தை மீளக்கட்டியெழுப்புவதும் இந்த மணித்துளியின் உடனடித் தேவையாக உள்ளது. தமிழ் மக்களுடைய வணக்கஸ்தலங்கள் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் பல அசுத்தப்பட்டு இடித்தழிக்கப்பட்டிருகின்றன. அரசாங்கத்தின் மிக உயர் நிலைகளுக்கு இது சம்பந்தமாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எமது மக்கள் சுரண்டப்பட்டு எமது நிலம் சூறையாடப்படுகின்றது.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் குறிப்பாக யாழ். குடாநாட்டிலும் சம்பூர் உள்ளிட்ட மூதூர் கிழக்கிலும் ஏராளமான நிலப்பரப்பு பலவருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குட்படுத்தப்பட்டு அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பூர்வீகத் தமிழ் மக்களுக்கு தங்களுக்குச் சொந்தமான பிரத்தியேக வீடுகளில் வாழ்வதற்கும் தங்களது சொந்தக் காணிகளில் பயிர் செய்வதற்கும் மீன்பிடித்தல் மற்றும் வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. தொழில்துறை சுற்றுலாத்துறை வட கிழக்கின் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்களின் குடிசனப் பரம்பலை மாற்றி சிங்களக் குடியேற்றங்களாக ஆக்குவதற்கு பல முன்னெடுப்புக்கள் தீவிரமாக நடைபெறுகின்றன.

கரையோரப் பகுதியில் மீன்பிடித்தலுக்கான உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டு தமிழ் பேசும் மக்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன. பனை வள அபிவிருத்திச் சபை அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் இருப்பதன் காரணமாக தங்கள் வாழ்வுக்கு பனை வளத்தில் தங்கியிருக்கின்ற மக்கள் மிக மோசமாகச் சுரண்டப்படுகிறார்கள். தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டு அவர்களுடைய சமத்துவத்திற்கான உரிமை பல வழிகளில் மீறப்படுகின்றது. பல வருடங்களிற்கு முன்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலர் இன்னமும் குற்றச்சாட்டின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் எமது மக்களில் பெரும்பாலானோரது வாழ்க்கை நிலைகள் பரிதாபமானதாகக் காணப்படுகின்றது.

2010 ஜனாதிபதித் தேர்தல்

ஜனவரி ஜனாதிபதித் தேர்தலிலே எமது மக்களுடைய அவல நிலையைக் குறித்தும் எமது அரசியல் உரிமைகளைப் பரிசீலிப்பதிலும் அரசாங்கத்திற்கு இருந்த அக்கறையற்ற போக்கை எமது மக்களுக்கு விளக்கிச் சொன்னோம். சர்வகட்சி பிரதிநிதி குழு ஒன்று அமைக்கப்பட்ட பொழுது கூட வடக்கு கிழக்கில் இருந்து தெரிவான 23 தமிழ் பிரதிநிதிகளில் 22 பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை. ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பெரும்பான்மையினரால் கொடுக்கப்பட்ட சிபார்சுகளும் கூட கருத்திலெடுக்கப்படவில்லை.

இந்தக் காரணங்களுக்காகவும் ஏனைய பல காரணங்களுக்காகவும் ஜனாதிபதி ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருப்பதற்கு இரண்டாவது தவணைக்காக கேட்ட மக்களாணையை நிராகரிக்கும் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களைக் கேட்டுக் கொண்டது. தமிழ் மக்கள் மிகத் தெளிவாகவும் சந்தேகமற்ற முறையிலும் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். ஒரு புதிய மக்காளணைக்கான ஜனாதிபதியின் கோரிக்கைக்கெதிராக மிகப் பாரியளவில் தமிழ் மக்கள் வாக்களித்தன் மூலம் முதலாவது தவணையின் பொழுது ஜனாதிபதியின் ஆட்சிமுறையை தாங்கள் விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாக வெளிக்காட்டியிருக்கின்றார்கள். அதைவிட முக்கியமானதாக தமக்கு வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

அரசியல் தீர்வு தொடர்பான எமது நிலைப்பாடு

இந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இரு இனங்கள் பகிரப்பட்ட இறையாண்மையூடாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமானதென சில குறிப்பான அரசியல் சாசன விதிமுறைகளும் கொள்கைகளும் அவசியம் என்று கருதுகின்றது.

கீழே தரப்படும் அதிகாரப் பகிரலுக்கான முக்கிய அம்சங்கள் நீடிய சமாதானத்திற்கும் இலங்கையின் அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கும் அபிவிருத்திக்கும் மிக அடிப்படையானவை:

• தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம். அவர்கள் இலங்கைத் தீவில், சிங்கள மக்களுடனும், ஏனையோருடனும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள்.

• தொடர்ச்சியான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாகும்.

• தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.

• அதிகாரப் பங்கீடானது இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில், சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையில் நிறுவப்படவேண்டும். இது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

• அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் உட்பட சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

• புதிய தொழிற்துறைகளை உருவாக்கவும் மற்றும் எமது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கவும், வடக்கு – கிழக்கில் நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படும்.

• பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற முடியாத மாணவர்களுக்கு அவர்களுக்குரித்தான அவசியமான துறைகளில் உயர் கல்வி கற்பதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்தல்.

எமது மக்களின் உடனடித் தேவைகள்

எமது மக்களிற்கு நிலைத்து நிற்கக்கூடியதும் சமாதானமுமான வாழ்வொன்றிற்காக செயற்படுகின்ற அதேவேளையில் அவர்களுடைய உடனடியானதும், தற்போது நிலவக் கூடியதுமான முக்கிய பிரச்சினைகளை கையாள்வதிலும் விரைந்து செயற்படுவோம். இப்பிரச்சினைகள் தொடர்பாக பின்வரும் விடயங்களிற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

வடக்கு – கிழக்கில் இருந்து இராணுவமும், இராணுவ தளபாடங்களும் அகற்றப்படுதல் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் மூலமும் 1983 ம் ஆண்டிற்கு முந்திய நிலைக்கு எமது பிரதேசத்தை இட்டுச் செல்லக் கூடிய அர்த்தமுள்ள இராணுவ விலகல் அவசியமானது.

• போரினால் இடம்பெயர்க்கப்பட்ட தமிழ் மக்கள் விரைவாக தமக்குரிய சொந்த இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டும், வாழ்வாதாரங்கள் மீளமைக்கப்பட்டும், அவர்களது கௌரவம் மதிக்கப்படுகின்றதுமான வகையில் மீள் குடியேற்றப்பட வேண்டும்.

• இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் உடல் ஊனங்களுக்கும், சொத்திழப்புக்களுக்கும் போதிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

• தேசிய நல்லிணக்கத்திற்கான முதற்படியாக எந்தவித குற்றமும் சுமத்தப்படாத, தடுப்புக்காவலில் உள்ள நபர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன், ஏனையவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட வேண்டும்.

• கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை விட்டு வெளியேறிவர்கள் மீண்டும் தமது இல்லங்களுக்கு வர அனுமதிக்கப்பட வேண்டுமென்பதுடன், அதற்கேற்ப சூழ்நிலையை உருவாக்கவும் வேண்டும்.

• புலம் பெயர்ந்த தமிழ் மக்களதும், சர்வதேச சமூகத்தினதும் செயலூக்கமிக்க பங்களிப்பின் மூலம் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் முழுமையான மீள் குடியேற்றமும், புனர்வாழ்வு, மற்றும் அபிவிருத்தி ஆகியன முன்னெடுக்கப்படும்.

• அகதிகள் என்ற நிலை அடியோடு நீக்கப்பட வேண்டும் - அதுவரை அகதிகளுக்கு வழங்கப்படும் நிவாரணம் இன்றைய உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யும் வகையில் உயர்த்தப்பட வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.

• சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய சமூகங்களின் சமத்துவத்தை உறுதிப்படுத்தவும், அவர்களின் வாழ்க்கைத்தரம், வாழ்வாதாரம் மற்றும் தொழில் துறையினை மேம்படுத்தவும் உத்தரவாதப்படுத்தும் வகையில் சமூக மேம்பாட்டு ஆணையம் ஒன்றின் அவசியத்தை வற்புறுத்தி நிற்கின்றோம்.

• கரையோர மக்கள், மீனவ சமூகம் சுதந்திரமாகத் தங்கள் தொழிலை நடத்துவதற்கும், தங்கள் தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும், அவர்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் பொருத்தமான நடவடிக்கையை முன்னெடுப்போம்.

• அடித்தட்டு மக்கள், கூலித்தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் வாழ்வாதாரம் மேம்படவும், தனியார் துறை ஊழியர், அரசு ஊழியர் சம்பளம் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்யும் வகையில் உயர்த்தப்பட வேண்டும்.

• நம் சமூகத்தில் பெண்களின் சமத்துவத்தை பேணவும், போர் காரணமாக அநாதரவாக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான பெண்கள், முதியோர், சிறுவர் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நல்வாழ்வுத் திட்டங்கள் உத்தரவாதப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.

• வேலையற்ற பட்டதாரிகள், மற்றும் வேலையற்றோர் தொழில் வாய்ப்பு பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நாம் உறுதி பூண்டுள்ளோம்.

2010 பொதுத் தேர்தலில் எதிர்நோக்கும் சவாலான பிரச்சனைகள்

ஒன்றுபட்ட நாட்டிற்குள் தமது தலைவிதிகளைத் தாமே தீர்மானிக்கக் கூடிய தமிழ் மக்களின் மறுக்க முடியாததும், பிரிக்க முடியாததுமான உரிமைகளை இலங்கையின் அரசாங்கங்கள் தொடர்ச்சியாக நிராகரித்தே வந்துள்ளன. 1956ஆம் ஆண்டிலிருந்து அவர்களின் இறைமைக்கான கோரிக்கைகள் அனைத்தும் நியாயப்படுத்த முடியாத வகையில் மறுக்கப்பட்டே வந்துள்ளது.

30 ஆண்டுகால அஹிம்சைவழிப் போராட்டங்கள் அனைத்தும் கொடூரமான அடக்குமுறை மூலம் நசுக்க முற்பட்டமையே ஓர் தவிர்க்க முடியாத ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. அடுத்து வந்த முப்பதாண்டுகளில் ஆயுத ரீதியான எதிர்ப்பை அடக்குதல் என்ற பேரில் எமது மக்களின் அடிப்படை உரிமைகள் மோசமாய் பறிக்கப்பட்டன. அப்பாவி பொதுமக்கள் மீது விமானக்குண்டு வீச்சுக்கள் நடாத்தப்பட்டன. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. மக்கள் தமது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். ஏராளமான இளைஞர்கள் சிறைப்படுத்தப்பட்டும், சித்திர வதைக்குள்ளாக்கப்பட்டும் மேலும் மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அத்துடன் அநேகர் கொல்லப்பட்டும் ஊனமுற்றும் சொத்துக்களை இழந்துமுள்ளனர். மிகக் கடுமையான மனித உரிமை வேண்டுமென்ற சர்வதேச சமூகத்தின் வலியுறுத்தல் மூலம் விசாரணைக்குழு அமைக்கப்பட்ட போதும் அது ஆக்கபூர்வமான தீர்வொன்றிற்கு இட்டுச் செல்லாமல் முடிவிற்கு வந்தது.
அரசகாணி சம்பந்தமாகவும் மற்றைய வளங்கள் சம்பந்தமாகவும், குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கென ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கமானது அப்பட்டமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மீறி இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரித்துவிட்டதாகக் கூறுகின்றது. வியன்னா பொது இணக்க ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது என்ற வகையில் இந்திய இலங்கை உடன்பாட்டை இலங்கை மீற முடியாது. அரசாங்கத்தின் நீதித்துறையானது பாரபட்சமானதும், அதிகாரத்துப் போக்குடையதுமான பல்வேறு நடவடிக்கைகளின் அனுபவங்கள் தமிழ் மக்கள் அரசின் நீதித்துறையையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு தள்ளியிருக்கின்றது.

இந்த நாட்டின் நிர்வாகத் துறையின் கொள்கைகள் தமிழ் மக்களை இந் நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வகையில் பெருமளவு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இன்றிருக்கக்கூடிய ஆட்சி முறை ஒன்றில் மத்திய சட்டவாக்கமைப்பு பெரும்பான்மைத்துவத்தின் மேலாதிக்கத்தின் கீழ் உறுதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. இது மிகத் தெளிவான ஒரு இன ஒழிப்புத் திட்டமே.

ஆனால் எவரும் இதுவரை இதனைத் தடுத்து நிறுத்தவில்லை. பல ஆண்டுகளாக இந்தியாவும், சர்வதேச சமூகமும் இது தொடர்பாக எழுப்பிய கரிசனைகளை இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகள் எவையும் தமக்கு அறிவுரை கூறவோ, வழிகாட்டவோ முடியாதென நாகரீகமடைந்த தேசங்களைக் கொண்ட சர்வதேச சமூகத்திற்கு பகிரங்கமாகவே பிரகடனம் செய்கிறது. இப்போக்கு தொடருமானால் திட்டமிட்டபடி அரசின் இன ஒழிப்பு வெற்றி பெறும். இத் தீவில் இருந்து தமிழர் என்ற மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள்.

இப்பொதுத் தேர்தல் முடிந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது. எமது மக்களின் ஜனநாயக ரீதியான ஆணையை அரசாங்கம் மதித்து தமிழ் மக்களின் இறையாண்மையை அங்கீகரிக்கக் கூடிய வகையில் ஆட்சி முறையை மீளக் கட்டியமைப்பதற்கான பேச்சுவார்த்தையை எம்முடன் நடாத்த வைப்பது முதலாவது கட்டம். கடந்த காலத்தைப் போல அரசாங்கம் எமது மக்களின் ஜனநாயக ரீதியான ஆணையை தொடர்ந்து புறக்கணிக்குமானால் இவ்விடயத்தை நாம் நேரடியாக இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் கொண்டு செல்வோம். தமிழ் மக்களுக்கெதிரான இவ் இன ஒழிப்புத் திட்டம் தொடர்பாக உரிய பார்வையைச் செலுத்தி பொருத்தமானதும் தாக்கமானதுமான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

இன்றைய பாணியிலேயே இலங்கை அரசு தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உரிய கௌரவம் வழங்காத ஆட்சி முறையைத் தொடருமானால், தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்முறையற்ற காந்திய வழியிலான சட்டமறுப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டால், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார விடயங்களில் தமிழ் மக்கள் நேரடியாக தங்களைத் தாங்களே ஆளுகை செய்வதைத் தடுத்தால் தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதோடு சர்வதேச சமூகம் வேறு தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்று கோருவதற்கு வழி அமைப்பதாக இருக்கும்.

தமிழ் மக்களுடைய உடனடித் தேவைகளை சந்திப்பதற்கும் எமது அரசியல் இலக்கை அடைவதற்கும், தமிழ் மக்களுக்கிடையிலான ஐக்கியம் மிகவும் முக்கியமானதென்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம். நான்கு பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த போதும் கடந்த பாராளுமன்றத்தில் அது பிளவு படவோ அல்லது ஓர் உறுப்பினரேனும் வெளியேறாத ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பேயாகும். எனினும் அன்றிலிருந்து தமிழ் பேசும் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் செல்வாக்கைப் பலவீனப்படுத்த வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பெருமளவிலான சுயேட்சைக் குழுக்களை ஒழுங்கு செய்ததனூடாக கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றைய அவசியத் தேவை எமது ஒற்றுமையை பாதுகாத்தலும் வெளிப்படுத்தலுமாகும். எமது மக்களையும் அவர்களின் நிலங்களையும் அழிப்பதற்கு அங்குலம் அங்குலமாக அரசு முன்னேறும் வேகத்தை நிறுத்துவதற்கான முதற்படி இதுவேயாகும். எமக்கிடையேயான ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதுடன் இக் குறிக்கோளை நோக்கி தமிழ் முஸ்லிம் தலைமைகள் ஆக்கபூர்வமாக செயற்படுகின்றனர். இவ்வொற்றுமையை மேலும் உறுதியானதாக்கவும் நிலை நாட்டவும் நாம் ஈடுபாட்டுடன் செயற்படுவோம். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களைத் திட்டமிட்ட வகையில் விரைவில் மீள்குடியேற்றுவதிலும் நாம் ஈடுபாட்டுடன் உள்ளோம்.

கௌரவமான மனிதர்கள் என்ற எமது தனித்துவமான அடையாளத்தினைப் பேணும் வகையில் எமது மக்களின் வாழ்வு மீள் கட்டியெழுப்பப்படும். நாங்கள் தனி மக்கள் என்ற வகையில் எமது உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே இத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெயரிலும் வீட்டுச் சின்னத்திலும் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைவரும் வாக்களிப்பதன் மூலம் துணிச்சலுடன் எழுந்து எமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டுமெனத் தமிழ் பேசும் மக்களைக் கோருகின்றோம்.

இரா சம்பந்தன் - தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
மாவை. சேனாதிராசா - பொதுச் செயலாளர், இலங்கை தமிழரசுக்கட்சி.
பிரசன்னா இந்திரகுமார் - பொதுச் செயலாளர், தமிழீழ விடுதலை இயக்கம்.
சுரேஸ் பிறேமச்சந்திரன் - ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.

0 comments