ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார்.

'ஆனால் சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார்.

குறுகிய காலத்தில் உலகளவில் உள்ள இந்துக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் நித்யானந்தன்.

தனக்குத் தானே பரமஹம்சர் என்று பட்டம் சூட்டிக் கொண்ட இவருக்கு உலகம் முழுக்கு 1500-க்கும் மேற்பட்ட ஆசிரம கிளைகள் உள்ளன.

பிரம்மச்சரியமே சக்தியின் இருப்பிடம் என்றும், தனது பிரம்மச்சரியம் மூலம் உடலையே கருவியாக்கி நினைத்ததைச் சாதிக்கும் சித்தி பெற்றதாகவும் போதனை செய்துவந்தவர் இந்த 32 வயது சாமியார்.

ஆனால் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில் சல்லாபம் செய்யும் செக்ஸ் காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த இருவாரங்களுக்கு முன்பு வெளியாகியதில் அவரது பிரம்மச்சரிய 'குட்டு' உடைந்தது.

அதன் பிறகு தலைமறைவான நித்தியானந்தா, தொடர்ந்து வீடியோ பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

கடந்த 10ம் தேதி முதல் முறையாக திடீரென வீடியோவில் தோன்றி, தான் அலகாபாத் கும்பமேளாவில் இருப்பதாகவும், விரைவில் நேரில் வந்து எல்லாவற்றையும் விளக்குவேன் என்றும் தெரிவித்தார்.

போலீஸ் மற்றும் மீடியா அவரை வலைவீசி தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர், அமெரிக்காவைச் சேர்ந்த தனது தீவிர சீடரும், ஃப்ரீலான்ஸ் எழுத்தாளருமான ராஜீவ் மல்ஹோத்ரா என்பவர் மூலம் தனது இரண்டாவது வீடியோ பேட்டியை வெளியிட்டார்.

அந்த பேட்டியில், ரஞ்சிதா விவகாரம் பற்றி ராஜீவ் மல்ஹோத்ரா எதையும் கேட்கவில்லை. சாமியாருக்கு உகந்தமாதிரி கேள்விகள் எழுப்பி விடைகள் பெற்று வீடியோ சிடியாக அனுப்பி வைத்தார்.

ஆஸ்ரமம் மீது சுமத்தப்பட்ட கொலை, கடத்தல், நில அபகரிப்பு போன்ற புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்பதுபோல இருவரும் மிக சாதுர்யமாக அதில் பேசி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மல்ஹோத்ரா - நித்தியானந்தா உரையாடல் வீடியோவின் மற்றொரு பாகம் வெளியானது. இது நித்யானந்தா வெளியிட்டுள்ள மூன்றாவது வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

இதிலும் கூட ரஞ்சிதா பற்றி நேரடியாக எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை ராஜீவ். பட்டும் படமாலும் பூசி மெழுகி அவர் கேள்வி கேட்க, இவரும் அதற்கு ரொம்ப டிப்ளமாடிக்காக பதில் சொல்லியுள்ளார்.

ரஞ்சிதா உடனான வீடியோ குறித்து நித்தியானந்தா குறிப்பிடுகையில்,

'பரந்து விரிந்த இந்த சமுதாயத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றையே நாங்கள் செய்தோம். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத எந்த சோதனை முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை.

அந்த வீடியோவில், சட்டத்துக்கு புறம்பாக எந்த விதமான அம்சங்களும் இல்லையே. ஆடை அணிந்த நிலையில் இரண்டு நபர்கள் இருக்கும் அந்த வீடியோவில் என்ன சட்டவிரோதமான செய்கை இருக்கிறது?

இன்னொன்று இதில், யாரும் யாரையும் எதற்காகவும் நிர்பந்திக்கவில்லை' என்று குறிப்பிடுகிறார்.

அதாவது ரஞ்சிதாவுடன் தான் படுக்கை அறையில் இருப்பதை நித்தியானந்தா இதன் மூலம் ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்த வீடியோ காட்சிகள் கிராஃபிக்ஸ் என்று இதுவரை கூறி வந்தவர், இப்போது இல்லை அதிலிருப்பது நாங்கள் இருவர்தான். ஆனால் எல்லாமே ஆடையுடன் இருந்த நிலையில்தான் நடந்துள்ளன என்கிறார்.

இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியிருப்பது:

'ஆஸ்ரமம் ஆன்மிகப் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்ததால் எங்களுக்கு எதிரான சதிகளை முறியடிப்பது குறித்து திட்டமிடவில்லை. அதோடு நாங்கள் தாக்குதல்களை எதிர்கொள்ள பயிற்றுவிக்கப்படவில்லை. இப்படியெல்லாம் நடக்கும் என எப்போதும் எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் மிகவும் அமைதியான, சாந்தமான எளிமையானவர். எங்களுக்குள்ளாகவே பக்தர் என்ற போர்வையில் ஒரு எதிரி இருப்பார் என நினைக்கவில்லை.
மீடியாக்கள் எங்கள் தரப்பு வாதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குற்றம்சாட்டுபவர்கள் கூறும் புகார்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது.

என்னை விட மீடியா தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. எனவே மீடியா சொல்வது தான் உண்மை என மக்கள் நம்புகிறார்கள்.

ஆக, இது எங்கள் மீதான ஒரு திட்டமிட்ட தாக்குதல். இப்படியாகும் என கொஞ்சமும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு எறும்பைக் கொல்ல யானையை அனுப்புவது போன்ற பெரிய திட்டத்தை எங்கள் எதிரிகள் செயல்படுத்தியுள்ளனர். இது ஒரு எதிர்பாராத பெரும்போர்.

நாங்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இருந்தபோதும் யாரிடமும் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை. எனினும், இந்த விவகாரங்களுக்கு பின்னர் உள்ளூர் ஆட்களே எங்களுக்கு எதிராக திரண்டு விட்டார்கள்.

மீடியாக்கள் ஒரே மாதிரியான தகவலை திரும்பத் திரும்ப ஒளிபரப்பி பாரபட்ச பதிவை உருவாக்கிவிட்டார்கள். எங்கள் பக்தர்கள் யாரிடமும் விளக்கத்தை பெறவில்லை.

நாங்கள் எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்துள்ளோம். அவற்றைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவே இல்லை. இன்று இந்த சாதாரண விஷயத்தைப் பெரிதாக்கி களங்கம் கற்பிக்கிறார்கள்.

இன்று எங்கள் ஆஸ்ரமத்தில் வெறும் 20 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டார்கள். எனது உயிருக்கே உத்தரவாதமிருக்குமா தெரியவில்லை. அதனால்தான் நான் இன்னமும் வெளிப்படையாக வராமல் இருக்க வேண்டியுள்ளது," என்றார் நித்தியானந்தா.

0 comments