தனது வீடு மீது தாக்குதல் நடந்தியது தொடர்பாக நடிகர் அஜீத் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டில் ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரபல சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்காக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த மாதம் 6ந் தேதி திரை உலகினர் முதல்வர் கருணாநிதிக்கு நடத்திய பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் சில கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக நான் என் கருத்துக்களை கூறி இருந்தேன்.

இதனால் அஜீத் தூண்டுதலின் பேரில் அவரது ரசிகர்கள் 15க்கும் மேற்பட்டோர் கடந்த 18ந் தேதி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள எனது வீட்டில் தாக்குதல் நடத்தினார்கள். என் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் நொறுக்கப்பட்டன. என் மனைவியையும் தாக்கி காயம் ஏற்படுத்தினார்கள். என் மகனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.

இது தொடர்பாக நான் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் அஜீத் மற்றும் தாக்குதல் நடத்திய அவரது ரசிகர்கள் மீது புகார் கொடுத்தேன். அவர்கள் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அஜீத்திடம் பண பலம் மற்றும் படை பலம் காரணமாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் இன்ஸ்பெக்டர் ஆகியோரை சந்தித்து முறையிட்டேன். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அஜீத் மீதும் மற்றவர்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூற இருந்தார்.

நீதிபதி ரகுபதி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜாக்குவார் தங்கம் சார்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜர் ஆனார்.

அரசு தரப்பில் வக்கீல் இளங்கோ ஆஜரானார். அவர் இது தொடர்பாக அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிபதி 2 வார காலத்துக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

0 comments