டெஸ்ட்கிரிக்கெட்டில் இருந்து இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற முடிவு செய்துள்ள இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன், 2011ஆம் ஆண்டு உலகப்கோப்பைக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வரும் அக்டோபரில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் முரளிதரன் ஓய்வு அறிவிப்பு வெளியிடுவார் எனத் தெரிகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு முரளிதரன் அளித்துள்ள பேட்டியில், “இன்னும் ஒன்று அல்லது 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன். அதன் பின் ஓய்வு பெற்றுவிடுவேன். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே நான் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.

2011 உலகக்கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதே எனது இலக்கு. எனது உடல் நலம் சிறப்பாக உள்ளதால் உலகக்கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன்” என்றார்.

இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 792 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முரளிதரன், 800 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் முதல் வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை பெற்றவுடன் முரளிதரன் ஓய்வு அறிவிப்பு வெளியிட உள்ளார்.

0 comments