நடிகை ரஞ்சிதாவுடன் சுவாமி நித்தியானந்தா இருப்பது போன்ற வீடியோ காட்சியில் உண்மை இல்லை. அது உண்மையில் சுவாமி நித்தியானந்தா கிடையாது. விரைவில் நேரில் தோன்றி அவரே உண்மையை விளக்குவார் என்று நித்தியானந்தா தியான பீட பி.ஆர்.ஓ. நித்ய ஆத்ம பிரமானந்தா கூறியுள்ளார்.

சென்னை பிரஸ் கிளப்பிற்கு நேற்று வந்த பிரமானந்தா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

இந்த விஷயத்தில் சூழ்ச்சி நடந்துள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். எப்போது நேரடியாக வந்து உண்மையை சொல்ல வேண்டுமோ அப்போது சுவாமி நித்யானந்தா வருவார்.

எங்கள் ஆசிரமத்திற்கு பலர் வருகின்றனர். உடல் நலம், மன நலம், ஆத்ம நலத்திற்காக அவர்கள் வருகிறார்கள். பரபரப்பாக செய்தியை வெளியிடுகிறோம் என்று டி.வி.யில் உண்மை தெரியாமல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

ரஞ்சிதாவை மிரட்டுகிறார்கள்...

தற்போது, நடிகை ரஞ்சிதாவை சுவாமி மீது போலீசில் புகார் கொடுக்க சொல்லி அந்த தனியார் டி.வி. நிறுவனத்தினர் மிரட்டி வருகின்றனர்.

ஆபாச காட்சியில் வந்த நபர் சுவாமி நித்யானந்தாவே அல்ல. அந்த உண்மையை சுவாமியே தெரிவிப்பார் என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். ஆனால் அவற்றுக்கு பிரமானந்தா பதிலளிக்கவில்லை. மாறாக பாதியிலேயே பேட்டியை முடித்து விட்டு எழுந்து சென்று விட்டார்.

கும்பமேளாவில் நித்தியானந்தா

முன்னதாக நித்தியானந்தாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர் கூறுகையில்,

சுவாமி நித்யானந்தா தலைமறைவாக இருக்கவில்லை. அவர் வாரணாசியில் நடைபெறும் கும்ப மேளா விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

சுவாமி பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட தனியார் டி.வி., ஒரு வார இதழ், 2 நாளிதழ்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 8-ந் தேதிக்குள் அவர்கள் பதில் அளிக்கக்கோரி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

டி.வி.யில் காட்டப்பட்ட ஆபாச காட்சியில் வருவது சுவாமி நித்யானந்தா அல்ல. அதில் வரும் இடமும் ஆசிரம இடம் அல்ல. அவருக்கு பிடிக்காதவர்கள் நவீன டெக்னாலஜி மூலம் இதுபோன்ற காட்சியை தயாரித்துள்ளனர். இதுபோன்ற பல காட்சிகள் சுவாமி நித்யானந்தா இ-மெயிலுக்கு ஏற்கனவே வந்ததுண்டு.

கொடுத்தது யார்?

இந்த ஆபாச காட்சியை ஒளிபரப்பிய டி.வி. நிறுவனமும், இந்த காட்சிகள் அடங்கிய சி.டி.யை யார் கொடுத்தார் என்று சரியாக பதில் சொல்லவில்லை. முதல் நாள் நடிகையின் முகத்தை மறைத்து காட்டினார்கள். அதன் பிறகு முழுமையாக காட்டினார்கள். மேலும், இந்த காட்சிகள் அடங்கிய சி.டி. வார பத்திரிகை ஒன்றிற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு கொடுத்தது யார்?.

சுவாமி நித்யானந்தா பெயரை களங்கப்படுத்தவே இவ்வாறு செய்துள்ளனர். இதுபோன்ற ஆபாச காட்சி அடங்கிய சி.டி. கிடைத்தவுடன் ஆசிரமத்தில் காட்டி கருத்து கேட்டு, பின்னர் டி.வி.யில் ஒளிபரப்பி இருக்க வேண்டும்.

டி.வி.யில் காட்டப்பட்ட ஆபாச காட்சியில் வருவது, தான் இல்லை என்பதில் சுவாமி நித்யானந்தா தெளிவாக உள்ளார். பயந்து ஓடி ஒளியும் அவசியம் அவருக்கு இல்லை. அவர் மீது ஆசிரமத்தில் உள்ளவர்களும், அங்கு வரும் பெண்களும் புகார் எதுவும் செய்யவில்லை. இந்த பிரச்சினையை சட்டப்படி சந்திப்போம் என்றார்.

0 comments