காதல் நம்மை அடிக்கணும் என்பது விண்ணைத்தாண்டி வருவாயா ஹீரோவின் பாலிசி. கௌதமின் இந்தப் படமும் நம்மை அடிக்கிறது... முதலில் காதலாக இறுதியில் சோகமாக.


கார்த்திக் (சிம்பு) சினிமாவில் இயக்குனராகும் லட்சியத்தில் இருக்கும் இன்‌ஜினிய‌ரிங் பட்டதா‌ரி. ஸ்லோமோஷனில் ஒரு துண்டு நீல மேகமாக கடந்து செல்லும் ஜெஸ்ஸியைப் (த்‌ரிஷா) பார்த்ததும் கார்த்திக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மலையாளியான அவர்கள் வீட்டில்தான் கார்த்திக் குடிவந்திருக்கிறார்.

பின்தொடர்தல், நட்பாக இருப்போம் என்ற நழுவல்களை கடந்து இருவரும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு குறுக்கே தடையாக வருகிறது இனமும், மதமும். இந்த‌த் தடையை காதலர்களால் தாண்ட முடிந்ததா இல்லையா என்பது கதை. இதனை தனது புத்திசாலித்தனமான திரைக்கதையில் கொஞ்சம் குழப்பமாகவே முடித்திருக்கிறார் கௌதம்.

சிம்புவுக்கு லைஃப் டைம் கேரக்டர். அலட்டாமல் பொறுப்பு உணர்ந்து நடித்திருக்கிறார். த்‌ரிஷா மீது கண்டதும் காதல் கொள்வதும், ரயிலில் தனிமையில் த்‌ரிஷாவை தன்வயப்படுத்துவதும் ரசிக்க வைக்கும் காட்சிகள். அமெ‌ரிக்காவில் த்‌ரிஷாவிடம் தனது காதலியை விவ‌ரிக்கும் இடத்தில் சிம்பு வாங்குவது டிஷ்டிங்சன். அசத்தலான காட்சி, அருமையான நடிப்பு.

யாரையும் ஒருமுறை காதலிக்க‌த் தூண்டும் கதாபாத்திரம் த்‌ரிஷாவுக்கு. மலையாள கிறிஸ்தவ பெண் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். காதலில் உருகுவதும், அப்பாவின் பேச்சை தட்ட முடியாமல் தடுமாறுவதும் த்‌ரிஷாவுக்கு இயல்பாக வருகிறது. காதல் காரணமாக திருமணத்தை நிறுத்துகிறவர் சிம்புவை விட்டு பி‌ரிந்து செல்வதை ஏற்க முடியவில்லை. தாலிகட்டும் நேரத்தில் அவர் திருமணத்தை நிறுத்தியதை அவரது வீட்டில் ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொள்வதும் ஆச்ச‌ரியம்.

இவர்கள் இருவர் தவிர படத்தில் கவரும் இன்னொருவர் ஒளிப்பதிவாளராக வரும் கணேஷ். இயல்பாக இவர் அடிக்கும் கமெண்ட்களுக்கு ரசித்து சி‌ரிக்கிறது திரையரங்கு. ஹீரோவுக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டு அலையும் நண்பர்களுக்குப் பதில் இவரை இணைத்திருப்பது இயக்குன‌ரின் புத்திசாலித்தனம். இவரது பணத்தில்தான் சிம்பு த்‌ரிஷாவைத் தேடி ஆலப்புழா செல்கிறார். அந்தவகையில் படத்தின் லா‌ஜிக்குக்கும் உதவியிருக்கிறார்.

அதிசயிக்கத்தக்க காதல் சிச்சுவேஷன் எதுவும் இல்லாமல் வசனங்களின் மூலமே காட்சிகள் நகர்கின்றன. நீ என்னைவிட ஒரு வயசு சின்னவன். தம்பின்னு வீட்ல சொன்னா யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க என்று சிம்புவை த்‌ரிஷா கலாய்க்கும் இடம், ஆலப்புழையில் இருவரும் சந்திக்கும் இரவு‌க் காட்சி என முக்கியமான அனைத்துக் காட்சிகளும் வசனங்கள் மூலமே வண்ணமாக்கப்படுகிறது. முக்கியமாக திருமணத்தை நிறுத்திய அன்று த்‌ரிஷா, சிம்பு சந்திக்கும் அந்த பௌர்ணமி இரவு. தமிழ் சினிமாவின் சிறந்த பத்து காதல் காட்சிகளை தேர்வு செய்தால் இதற்கும் நிச்சயம் இடமிருக்கும்.

ஆண்டனி பாபு வழக்கமான காதலை எதிர்க்கும் அப்பா. அதேபோல் வழக்கமான ஒரு அண்ணனும் த்‌ரிஷாவுக்கு இருக்கிறார். தவிர்த்திருக்கலாம். த்‌ரிஷாவின் காஸ்ட்யூம் டிஸைனருக்கும், இயக்குனருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். மனோ‌ஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கவிதை. குறிப்பாக ஆலப்புழா காட்சிகள். ஒருமுறை தங்கி வரலாம் என்று யாரையும் ஆசைப்பட வைக்கும்.

படத்தின் மிகப் பெ‌ரிய ப்ளஸ் இசை. பாடல்கள் பின்னணி இசை இரண்டும் அற்புதம். ஓசானா பாடல் எழுந்து ஆட வைக்கும் புத்துணர்ச்சி. எடிட்டர் படத்தின் இரண்டாம் பகுதியில் ‌ரிலாக்ஸாக இருந்திருக்கிறார். கொஞ்சம் கத்தி‌ரி போட்டிருக்கலாம்.

தனது காதல் கதையை சிம்பு திரைப்படமாக எடுக்கும் யுக்தி பாராட்டுக்கு‌ரியது என்றாலும், சிம்புவும், த்‌ரிஷாவும் இணைந்துவிட்டது போல் காட்டி இறுதியில் 90 டிகி‌ரியில் கதையை மாற்றுவது சின்ன தடுமாற்றம்.

சின்னச் சின்ன குறைகளை மீறி இந்தக் காதல் நம்மை ஈர்க்கவே செய்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா... விருப்பத்துக்கு‌ரிய தேர்வு.

0 comments