அஜீத்-முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? பலரது மனதையும் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது இப்போது. அஜீத் பேசியது திரையுலக விஷயங்கள் மட்டுமல்ல, தனது கனவுகளில் ஒன்றான கார் ரேஸ் பற்றியும்தானாம். கிட்டதட்ட நாற்பது நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பில் அஜீத் பெரிதாக ஒரு விஷயத்தை சாதித்துவிட்டு வந்திருக்கிறார். அது என்ன?


இங்கிலாந்தில் நடந்த பார்முலா 3 கார் ரேசில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தை அடைந்தவர் அஜீத். பார்முலா 2 ரேசுக்கு முன்னேற வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம்.
"இந்தியாவில் கார் பந்தயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதை வெறும் விளையாட்டாக பார்க்காமல் வியாபாரமாகவும் கருத வேண்டும். பெரிய நிறுவனங்கள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே அதிக ஊக்கம் தருவதை விட்டுவிட்டு கார் பந்தயங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்".

"இந்த பந்தயம் என்னவோ பெரும் பணக்காரர்களின் விளையாட்டு என்று கருதப்படுகிறது. அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கவே நானும் கூட இதில் ஈடுபடுகிறேன். இந்த விளையாட்டை நம் நாட்டில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் தருவதை போல இந்த விளையாட்டுக்கும் ஊக்கம் தர வேண்டும்" என்று முன்பு ரேஸ்களில் கலந்து கொள்ளும் போது கூறி வந்தார் அஜீத்.

முதல்வரை சந்தித்தபோதும் இது குறித்துதான் பேசினாராம் அஜீத், "ஃபார்முலா 2 கார் ரேசுக்கு அரசே நிதி ஒதுக்கி ஸ்பான்சர் செய்யணும். இதுக்கு 23 கோடி ரூபாய் ஆகும். அதை நீங்க எங்களுக்கு செஞ்சு தரணும்" என்று வேண்டுகோள் வைத்தாராம். தகுதியான நான்கு வீரர்களின் பயோ டேட்டாக்களையும் கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள். இதுபற்றியெல்லாம் ஆர்வமாகவும் விளக்கமாகவும் கேட்டுக் கொண்ட முதல்வர், உடனடியாக பாஸிட்டிவான பதிலும் கொடுத்தாராம்.

0 comments