தனது ‘உண்மையற்ற பேச்சுக்காக’ அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து திரைப்பட சங்கங்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அஜீத் பேச்சுக்கு கைதட்டி ஆதரவு அளித்ததற்காக ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


நடிகர் நடிகைகளை விழாக்களுக்கு நிர்ப்பந்தப்படுத்தியும், மிரட்டியும் அழைக்கிறார்கள் என்று அஜீத் வெளியிட்ட கருத்தால் திரையுலகம் பிளவு பட்டு நிற்கிறது. அஜீத் தனது கருத்தை தைரியமாக கூறியுள்ளார். அவரை நான் பாராட்டுகிறேன் என்று ரஜினி ஆதரித்துள்ளார்.


ஆனால் பெப்சி, விநியோகஸ்தர் சங்கம், திரைப்பட உரிமையாளர் சங்கம் போன்றவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சங்க விதிகளை பின்பற்றி நடக்கும்படி வற்புறுத்த சங்கத்தின் தலைவருக்கு உரிமை இருக்கிறது என்று பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தெரிவித்தார். சங்க முடிவுகளை ஏற்காமல் ஒற்றுமைக்கு குந்தகம் செய்வோர் தூக்கி வீசப்படுவார்கள் என்று விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் எச்சரித்தார்.

அஜீத் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், அவரது படங்களை திரையிடுவதா? வேண்டாமா? என்பது பற்றி வருகிற 3 ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதற்கிடையில் ஜாக்குவார் தங்கம் வீட்டில் ரஜினி, அஜீத் ரசிகர்கள் கல்வீசியது மேலும் பிரச்சினையை தீவிரமாக்கியது.


இந்த விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கவும், சமரசம் ஏற்படுத்தவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது. அனைத்து திரைப்பட சங்கத்தினரையும் அவசரமாக அழைத்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

அண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பர் தியேட்டரில் இக்கூட்டம் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கினார். நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சிவா, எடிட்டர் மோகன், சத்திய ஜோதி தியாகராஜன், ஆர்.கே.செல்வமணி, மாதேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அஜீத் பேச்சு பற்றி கூட்டத்தில் கார சாரமாக பேசப்பட்டது. ஒற்றுமையாக எவ்வாறு செயல்படுவது என்றும் விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:


தமிழ் திரையுலகின் சார்பில் கடந்த பிப்ரவரி 6 ம் தேதி நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் அஜீத்தின் உண்மையற்ற பேச்சு கலையுலகினர் அனைவரையும் மனம் புண்படச் செய்துவிட்டது. எனவே அவர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தாக வேண்டும்.


அஜீத்தின் அந்தப் பேச்சு நடந்த பல நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அஜீத்தின் தைரியத்தைப் பாராட்டுவதாக தெரிவித்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருந்தது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை இது புண்படுத்திவிட்டது.


இதனால் அஜீத்துக்கும் ரஜினிகாந்துக்கும் ‘தொழில் ஒத்துழையாமை’ (ரெட் கார்டு) போடும் அளவுக்கு நிலைமை மோசமானது. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்க முயன்றது.


அதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று, தொழிலாளர்கள் மனவேதனையில் இருந்தாலும், முடிவை மறுபரிசீலனை செய்து ரஜினிகாந்த் அவர்களின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இப்போதைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


பிரச்சினை இத்துடன் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டு விட்டது. எனவே இது தொடர்பாக இனி யாரும் தனிப்பட்ட முறையில் பேட்டி அறிக்கை தரக் கூடாது என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கண்டன, வருத்தம் கோரும் தீர்மானத்தில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments