கோடம்பாக்கத்தில் நேற்றைய உஷ்ணநிலை கொஞ்சம் ஏற்றம்தான். மாலை மூன்று மணியிலிருந்தே பரபரக்க ஆரம்பித்துவிட்டது ஏரியா. முதல்நாள் பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பெப்சி தலைவர் வி.சி.குகநாதனின் ஆவேச பேச்சு முன்னணி நாளிதழ் ஒன்றில் தலைப்பு செய்தியாக இடம் பெற்றது.



சங்க கட்டுப்பாடுகளை யாரும் மீறக்கூடாது. மிரட்டுவது வேறு. வற்புறுத்துவது வேறு. ஒரு கட்சி என்றால் அதன் சட்டதிட்டங்களுக்குக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடப்பது அவசியம். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவோ, வெளியே து£க்கி போடவோ அந்த கட்சி தலைவருக்கு உரிமை இருக்கிறது. அதுபோல தொழிற்சங்க விதிகளை பின்பற்றி நடக்கும்படி வற்புறுத்தவும் மீறி செயல்படுபவர்களை மிரட்டவும் அந்த சங்கங்களுக்கு உரிமை இருக்கிறது என்ற குகநாதனின் பேச்சு இடம் பெற்றிருந்தது.

இன்னொரு பக்கத்தில் 'ரஜினி ஒரு கோமாளி' என்று பேட்டியளித்திருந்தார் ஜாக்குவார் தங்கம். இதையடுத்து மாலை ஜாக்குவார் தங்கத்தின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டது. இந்த செய்தி காற்றுவாக்கில் பரவ ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் கல்வீசிவிட்டு தப்பியோடினர் சில சமூக விரோதிகள். இத்தனைக்கும் உள்ளே ஒரு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக நடிகர் சங்கத்தின் சார்பில் ஒரு கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தன்னிச்சையாக செயல்படுகிறார். நடிகர்களை அவது£றாக பேசுகிறார் என்றும், இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு அவரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பான பெப்சி நிர்வாகிகள் உடனடியாக ஒரு அவசர கூட்டத்தை கூட்டியிருந்தனர். காரசாரமான விவாதங்களை தொடர்ந்து ஒரு முக்கியமான முடிவை எடுத்தார்களாம் அந்த கூட்டத்தில். என்னவென்று?

ரஜினி-அஜீத் இருவர் படங்களுக்கும் தொழில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று. இந்த தீர்மானம் அறிக்கையாக பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படுவதற்கு முன் அவசரம் அவசரமாக பெப்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர் சங்கம், அவர்களை சமாதானப்படுத்த முயன்றது. முதல்வர் திரையுலகத்திற்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட அதிரடி முடிவுகள் வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அவர்களிடம் எடுத்து கூறியது. நடிகர் சங்கத்தையும், பெப்சி அமைப்பையும் சமாதானப்படுத்த பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இன்னும் முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டிருக்கும் இந்த பிரச்சனை இன்று காலையும் தொடர்கிறது.

இன்று காலை சுமார் பதினொரு மணிக்கு பெப்சி அமைப்பின் கூட்டம் நடந்து வருகிறது. என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்பது பிற்பகல் தெரியும்.

0 comments