சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. பிற படங்களுடன் ஒப்பிடுகையில் இதன் வசூல் மிக மிக அதிகம்.

5. தமிழ்ப் படம்

தமிழ்ப் படத்துக்கு இது ஆறாவது வாரம். ஆறு வார இறுதியில் இதன் மொத்த சென்னை வசூல் 2.57 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 5.8 லட்சங்கள்.

4. தீராத விளையாட்டுப் பிள்ளை

விளம்பரங்களால் எப்போதும் ஜெயித்துவிட முடியாது என்ற பாடத்தை தந்திருக்கிறது விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை. நான்கு வாரங்களில் 1.7 கோடியையும், சென்ற வார இறுதியில் 7.9 லட்சங்களையும் மட்டுமே இப்படத்தால் வசூலிக்க முடிந்துள்ளது.

3. யாதுமாகி

சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 8.16 லட்சங்களை வசூலித்துள்ளது. காதல் படமான இது ரசிகர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுமா என்பது இந்த வாரம் தெ‌ரிந்துவிடும்.

2. மாத்தியோசி

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதைப் போலவே மிகுந்த ஏமாற்றத்தையும் தந்திருக்கிறது மாத்தியோசி. எதிர்பார்ப்பின் பலன், முதல் மூன்று தினங்களில் 9.7 லட்சங்கள். ஏமாற்றத்தின் பலன் அடுத்தடுத்த தினங்களில் தெ‌ரியவரும்.

1. விண்ணைத்தாண்டி வருவாயா

மூன்று நாள் முன்பு வெளியான படங்கள் ஒற்றை இலக்கத்தையே தாண்ட முடியாமல் நொண்டியடிக்கும் போது கௌதமின் இந்தப் படம் இரண்டு வாரங்கள் கடந்த பின்பும் வசூலில் புழுதி கிளப்புகிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 53.2 லட்சங்கள். பிற படங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வசூல். இதுவரையான இதன் சென்னை வசூல், 2.92 கோடிகள்.

நமிதாவின் கவர்ச்சியை நம்பி சென்ற வாரம் வெளியான அழகான பொண்ணுதான் படத்தை ரசிகர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மூன்றரை லட்சத்துக்கும் குறைவாகவே இப்படம் வசூலித்துள்ளது. கவர்ச்சியை நம்புகிறவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

0 comments