தமன்னா... இன்றைய தேதியில் தமிழின் நெ.ஒன் நடிகை. இதைச் சொன்னால் அப்படியா என்று அப்பாவியாக முகம் மலர்கிறது. தனுஷ், சூர்யா, பரத், கார்த்தி, ஜெயம் ரவி இப்போது விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் வதந்தி, அதிகமாக சம்பளம் கேட்கிறார். புகழ்ச்சிக்கு மட்டுமல்ல இந்த புறணிக்கும் பொறுமையாகவே பதில் வருகிறது தமன்னாவிடமிருந்து.

கே.வி.ஆனந்தின் கோ படத்தில் முதலில் ஒப்பந்தமான நீங்கள் அந்தப் படத்திலிருந்து விலகியதற்கு அதிக சம்பளம் கேட்டதே காரணம் என்கிறார்களே, இது உண்மையா?

படத்தின் கதை, இயக்குனர், தயா‌ரிப்பு நிறுவனம், உடன் நடிக்கும் நடிகர் இவையெல்லாவற்றையும் வைத்துதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். சம்பளத்தைப் பொறுத்தவரை எனக்கு தகுதியான சம்பளத்தையே கேட்கிறேன், தயா‌ரிப்பாளர்களும் தருகிறார்கள். ஒரு படத்துக்கு கொடுக்கும் கால்ஷீட்டைப் பொறுத்தே சம்பளம் வாங்குகிறேன். அதனால் அதிக சம்பளம் கேட்கிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சக நடிகைகளுடன் உங்களுக்கு தகராறு என்று வரும் செய்திகள்...?

பையா படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஏதோ சில காரணங்களால் அவர் அதில் நடிக்கவில்லை, நான் நடித்தேன். நான் நடிக்காவிட்டாலும் வேறு யாராவது நடித்திருப்பார்கள். இதை வைத்து எனக்கும் நயன்தாராவுக்கும் லடாய் என்று எழுதினார்கள். மீடியாக்கள் அப்படி எழுதியதே தவிர எனக்கும் அவருக்கும் நடுவில் எந்த‌ச் சண்டையும் இல்லை.

இப்போது நடித்துவரும் படங்கள்?

ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி என்ற படத்தில் நடிக்கிறேன். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக் படத்தின் ‌ரீமேக்தான் இது. ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியை புதுமையாக எடுத்திருக்கிறார்கள். ஷோபி மாஸ்ட‌ரின் கோ‌ரியோகிராஃபியில் நானே என்னுடைய நடனத்தை புதிதாக உணர்ந்தேன்.

இதுதவிர விஜய்யுடன் சுறாவில் நடித்து வருகிறேன். விஜய் எனக்குப் பிடித்த நடிகர். சின்சியர் வொர்க்கர். அவருடைய காம்பினேஷனில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுறாவில் உங்களுக்கு என்ன மாதி‌ரியான வேடம்?

சிட்டி கேர்ள். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். படம் பார்த்து தெ‌‌ரிந்து கொள்ளுங்கள்.

கல்லூரி வரை நீங்கள் கவனிக்கப்படாத நடிகை. இப்போது தமிழின் முதல்வ‌ரிசை நடிகைகளில் ஒருவர். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?

உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். இப்படியொரு இடத்துக்கு வருவேன் என்று நான் நினைக்கவில்லை. அதேநேரம் இந்த இடம்தான் என்னுடைய லட்சியமாக இருந்தது. என் லட்சித்துக்கு படிக்காதவனும், அயனும் ரொம்பவே உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பையா படத்திற்காக கார் ஓட்ட கற்றுக் கொண்டீர்களாமே?

எனக்கு கார் ஓட்ட தெ‌ரியும். பையாவுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய கே‌ரிய‌ரில் பையா முக்கியமான படமாக இருக்கும்.

நாலு படம் நடித்ததும் இந்திப் பக்கம் ஒதுங்குவதுதான் இப்போது பேஷன். நீங்கள் எப்படி?

தமிழில் எனக்கு என்று ஒரு இடம் இப்போது இருக்கிறது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இந்தியில் நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஒருவேளை வாய்ப்பு வந்தால்...?

கதை நன்றாக இருந்தால், யோசிக்கவே மாட்டேன், கண்டிப்பாக நடிப்பேன்.

0 comments