முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்து சறுக்கலுடன் 3வது ஐபிஎல் தொடரை ஆரம்பித்துள்ள டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆடிய இரு போட்டிகளிலும் அசத்தலாக வெற்றி பெற்ற தெம்புடன் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸை இன்று சந்திக்கிறது.

அதேபோல இன்னொரு போட்டியில் கும்ப்ளே தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சங்கக்காரா தலைமையிலன கிங்ஸ் லெவன் பஞ்சாபை சந்திக்கிறது. இந்த இரு அணிகளும் தத்தமது முதல் போட்டியில் தோல்வியைச் சந்தித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் டோணி தலைமையிலான சென்னை அணி ஆயத்தமாகி வருகிறது. அதேசமயம், ஹாட்ரிக் வெற்றியை சுவைக்க ஷாருக்கானை உரிமையாளராகக் கொண்ட கொல்கத்தா அணி உறுதியுடன் உள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நடந்த முதல் ஐபிஎல் தொடரில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை சந்தித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அந்தத் தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளை வீழ்த்தியது. ஆனால் 3வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் தோல்வியுற்றது. தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து தொடரில் 6வது இடத்தையே பிடித்தது.

இந்த ஆண்டு தொடரிலும் முதல் இரு போட்டிகளில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தியுள்ளது கங்குலி தலைமையிலான கொல்கத்தா. தற்போது 3வது போட்டியாக சென்னையை சந்திக்கவுள்ளது. 2008ல் நடந்தது போல இந்த ஆண்டும் நடந்து விடுமோ என்ற பீதி கொல்கத்தா ரசிகர்களின் மனதில் உள்ளது.

ஆனால் அப்படி நடந்து விடாமல் தடுத்து வெற்றி பெற்று விட வேண்டும் என்ற வேகத்தில் கொல்கத்தா அணி உள்ளது. எனவே இந்தப் போட்டி பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் மழையால் பாதிப்பு வரலாம் என்று தெரிகிறது. எனவே கொல்கத்தா வீரர்கள் சற்று கவலையுடன் காணப்படுகின்றனர்.

ஆறுதல் தேடும் முயற்சியில் பெங்களூர், பஞ்சாப்...

இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் போட்டியில் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ள பஞ்சாபும், பெங்களூரும், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மோதவுள்ளன.

பெங்களூர் அணி தனது முதல் போட்டியில், கொல்கத்தாவிடம் தோல்வியைச் சந்தித்தது. அதேபோல பஞ்சாப் அணியை முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் காலி செய்தது.

பெங்களூரும், பஞ்சாபும் இதற்கு முன்பு 4 முறை மோதியுள்ளன. இதில் 3 முறையும் பஞ்சாபே வென்றது. ஒரு முறை மட்டுமே பெஙகளூர் வெற்றி பெற்றது.

இன்று உகாதி தினம். எனவே பெங்களூர் ரசிகர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக வெற்றியைத் தருமா பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

0 comments