நித்தியானந்தா மீதான வழக்குகள் தொடர்பான கோப்புகள் வரவில்லை என்று தெரிவித்த கர்நாடக காவல்துறை தற்போது கோப்புகள் வந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

பெங்களூர் அருகே பிடதி ஆசிரமத்தில் பணி புரிந்து வந்த லெனின் கடந்த 6ம் தேதி சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தார்.

ஆசிரமத்துக்கு வரும் அழகுப் பெண்களிடம் அத்துமீறியது, பாலியல் ரீதியாக பலாத்காரத்துக்கு உட்படுத்துவது என பல்வேறு புகார்களை நித்யானந்தா மீது லெனின் கூறியிருந்தார்.

அதற்கு ஆதாரமான வீடியோ காட்சிகள் அடங்கிய சிடிக்கள் மற்றும் ஆவணங்களையும் போலீசாரிடம் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் நித்யானந்தா மீது 295 (ஏ) (மத உணர்வை துன்படுத்துதல்), 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல்), 506 (1) (மிரட்டல்), 120 (பி) சதித்திட்டம் தீட்டுதல்) ஆகிய 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால் நித்யானந்தா சாமியாரின் ஆசிரமம் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடதி என்ற இடத்தில் இருக்கிறது. எனவே நித்யானந்தா பற்றி கூறப்பட்டுள்ள புகார் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகள் கர்நாடக போலீசுக்கு மாற்றப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்தார்.

இதன் படி, வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் அனைத்தும் ரிஜிஸ்திரர் தபால் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டு விட்டதாக தமிழக டிஜிபி லத்திகா சரண் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஆனால், கர்நாடக போலீசாரோ நித்யானந்தா வழக்கு தொடர்பாக தங்களுக்கு எந்த விதமான ஆவணங்களும் இன்னும் வந்து சேரவில்லை எனக் கூறினர்.

இதுகுறித்து கர்நாடக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஏ.ஆர் இன்ஃபேன்ட் இதுபற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில்,

'வழக்கு ஆவணங்கள், ஆதாரங்கள் எதுவும் எங்களின் கைக்கு கிடைக்கவில்லை. ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தமிழக போலீசார் அவற்றை தபாலில் அனுப்பி விட்டார்களா என்பது குறித்தெல்லாம் எங்களுக்கு தெரியாது. ஆனால் அதுபற்றி எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை.

உரிய ஆவணங்கள் எங்கள் கைக்கு வந்து சேரும் வரை நாங்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது' என்று கூறியிருந்தார். இதேபோல, கர்நாடக டிஜிபி அஜய்குமார் சிங்கும் கோப்புகள் வரவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கோப்புகள் டிஜிபி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்ததாக தற்போது காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழில் கோப்புகள்...

திங்கள்கிழமை மாலை கோப்புகள் டிஜிபி அலுவலகத்தை அடைந்ததாகவும், அதேசமயம், வழக்கு தொடர்பான ஆவணங்கள் தமிழில் இருப்பதால் அவற்றை கன்னடத்திற்கு மொழிபெயர்க்க வேண்டியிருப்பதாகவும் போலீஸ் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விசாரணை தொடங்க நாட்களாகும் என்றும் அவை தெரிவித்தன.

கோப்புகள் வந்து விட்டதையடுத்து விசாரணைக்கு வசதியாக பிடுதி போலீஸ் நிலையத்தில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

ஆசிரமம் உள்ள இடம் அரசு நிலம் அல்ல...

இதற்கிடையே, நித்யானந்தா ஆசிரமம் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்பட்ட புகார் குறித்து ராம்நகர் மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் 'முறைப்படி நிலம் அளந்து சரி பார்க்கப்பட்டது. நிலம் தொடர்பான ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன. ஆசிரமம் அமைந்துள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் அல்ல' எனக் கூறியுள்ளார்.

பாலியல் விவகாரம் தொடர்பாக நித்யானந்தா மீது கர்நாடக போலீசாரிடம் புகார் எதுவும் தரப்படவில்லை. எனவே பெங்களூர் போலீசார் சாமியார் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை

தமிழகத்தில் மற்றொரு வழக்கு:

இந் நிலையில் தெய்வீக சக்தியால் நோயைத் தீர்ப்பதாகக் கூறி நித்யானந்தா ஏமாற்றிவிட்டதாக வழக்கறிஞர் ஒருவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமணப்பெருமாள், நித்யானந்தாவின் பக்தர். பெங்களூர் ஆசிரமத்துக்கு பல முறை சென்றுவந்தவர்.

இவரிடம், கடந்த மாதம் 18ம் தேதி சேலம் சீரகப்பாடி தியானபீட திறப்பு விழாவின் போது நிதாயனந்தா ரூ.25 ஆயிரத்தை வாங்கியுள்ளார்.

லட்சுமணனின் மனைவி வசந்தியின் தலைவலி பிரச்னையை தீர்ப்பதாக நித்யானந்தா கூறியிருக்கிறார். ஆனால், நோய் குணமாகவில்லை.

எனவே நித்யானந்தா தன்னை ஏமாற்றிவிட்டதாக லட்சுமணப்பெருமாள் மனுவில் கூறியுள்ளார். இவ்வழக்கு வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நித்யானந்தா தேர்வு செய்த ஏப்ரல் 1:

நடிகை ரஞ்சிதா உடனான படுக்கை அறை காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி 10 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து நித்யானந்தா கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீடியோக்களில் தோன்றி தன்னிலை விளக்கம் அளித்து வருகிறார்.

ஹரித்துவாரில் இருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வரும் ஏப்ரல் 1ம் தேதி பெங்களூரில் நிருபர்களை நேரில் சந்திப்பதாக கூறியுள்ளார் என்று பிடுதி ஆசிரம வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

0 comments