நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவைகள்' செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் நித்தியானந்தா.

ஹரித்வாரில் கும்பமேளாவில் இருப்பதாகக் கூறப்படும் நித்தியானந்தா ஆங்கில மற்றும் தெலுங்கு சேனல்களுக்கு ஒரு புதுப் பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டி:

கேள்வி: கடந்த 2 வாரங்களாக தங்களைப் பற்றிய முரண்பாடான விவகாரங்கள் வெளியாகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நித்தியானந்தா: தற்போதைய விவகாரத்துக்கு முன்னரும், பின்னரும் யூ டியூப் தேடலில் நான்தான் உச்சத்தில் இருந்துள்ளேன்.

முன்பு ஆன்மிக குரு என்ற அடிப்படையிலும், தற்போது மோசடி என்ற பெயரிலும் அதிகளவில் வீடியோவில் காட்டப்படுகிறேன்.

எனது 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் இரண்டு எதிரெதிர் முனைகளையும், புகழின் உச்சத்தையும், தாழ்வையும் தொட்டுவிட்டேன்.

இவை எனக்கு வாழ்க்கையின் இதர பரிமாணங்களை கற்றுத் தந்திருக்கின்றன. இதுவரை பார்க்காத பரிமாணங்களை நான் கண்டுவருகிறேன்.

எனக்கு எதிராக இந்த அளவுக்கு ஒரு பகைமை உருவாகும் என்றோ, என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்கள் என்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை.

இந்த கஷ்டமான நேரத்திலும் எனக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான இ-மெயில் கடிதங்கள், போன் அழைப்புகள், ஆதரவு குரல்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை தான் எனக்கு ஆறுதல்.

கேள்வி: சர்ச்சைக்குரிய அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது நீங்கள் தானா?

நித்தியானந்தா: அதில் நிறைய தவறான சித்தரிப்புகள், இடைச்செருகல மற்றும் மார்ஃபிங் நடந்துள்ளன.

வீடியோ காட்சிகளில் எந்தெந்த இடங்களில் 'மார்ஃபிங்' செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய அவற்றை லண்டனுக்கு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம்.

அந்த வீடியோவில் காணப்படும் காட்சிகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் நான் பிரக்ஞையற்ற நிலையில் இருந்தேன்.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறை திரிக்கப்பட்டும், தவறானதாகவும் சித்தரிக்கப்பட்டு வெளியுலகுக்கு காட்டப்பட்டுள்ளது. எனது 'பிரைவசி' பறிபோயுள்ளது.

அதோடு நான் குளித்துவிட்டு உடை மாற்றுவதைக் கூட மீடியாக்கள் படமெடுத்துள்ளன. இது நிச்சயமாக என்னை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நடந்துள்ளது.

கேள்வி: வீடியோவின் சில பகுதிகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள். அந்த நடிகை (ரஞ்சிதா) உங்களுக்கு சேவை செய்தாரா? இந்த வீடியோ காட்சிகள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த நடிகை ஆசிரமத்தில் இருந்தாரா?

நித்தியானந்தா: ஆம்.. நடிகை ரஞ்சிதாதான் அது. அதை நான் மறுக்கவில்லை. மறைக்கவுமில்லை. ரஞ்சிதா நேற்றும் இன்றும் நாளையும் எனது தீவிர பக்தைதான். அவர்களது மொத்த குடும்பமும் எனது பக்தர்கள்.

ரஞ்சிதா எனக்கு நீண்ட காலமாக எனக்கு சேவை செய்பவர். அந்த காலகட்டத்தில் எனக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் இருந்தேன். நீண்ட நாள்கள் அப்படியிருந்தேன். அப்போது அவர் தான் என்னை முழுவதுமாக மனமுவந்து கவனித்துக் கொண்டார்.

அந்த விடியோ படம் எடுக்கப்பட்டபோது உண்மையில் நான் உடல் நலமற்று... 'சமாதி' நிலையில் இருந்தேன்.

சில நபர்கள் தவறாக விரும்பியதால் அவற்றை தவறாக செய்து இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.

கேள்வி: உங்களை பின்பற்றுபவர்களுக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையே?

நித்தியானந்தா: தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பிரமச்சரியம் என்பது தனி நபர்களின் விஷயம். அவற்றை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன்.

அந்த விஷயத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொன்னேன். என்ன நடக்கிறது என்பதை உணரும் பிரக்ஞையுடன் உங்களுக்கு 'பயோ-மெமரி' அதிகளவில் இருக்குமானால், மற்றவர்களின் தேவை குறைவானதாக இருக்கும்.

உங்களது பயோ- மெமரி வேறு சிலரின் தேவையில் இருந்தால் திருமண வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம். தனி நபர்கள் அவர்கள் விரும்பியபடி தங்களது நிலையை தேர்வு செய்து வாழ வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன்.

எனது சொந்த விஷயத்தில் சிலர் ஏன் நுழைந்தார்கள்? இதில் சதி திட்டமோ அல்லது வேறு ஏதோ இருக்கிறது என்பது உறுதி. அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டனர்.

இந்த வீடியோ எனக்கு எதிரான மிகப் பெரிய சதி. ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ரத்தத்தை வைத்து ரத்தத்தைக் கழுவ முடியாது.

எனது பல்வேறு சேவைகளை கருத்தில்கொண்டு இதனை சமுதாயம் நிராகரித்திருக்க வேண்டும்.

விரைவில் பெங்களூருக்கு வருவேன்

கேள்வி: மீண்டும் ஆஸ்ரமத்திற்கு திரும்புவீர்களா?

நித்யானந்தா: 'எனது நிலையை சீடர்கள் புரிந்து கொண்டுள்ளனர். நான் ஹரித்வாரில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை.

நான் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. கும்பமேளாவில் எனது கடமைகள் முடிந்தபின் நான் பெங்களூர் ஆஸ்ரமத்துக்குத் திரும்புவேன்.

இந்த வழக்கு தொடர்பாகவோ, குற்றச்சாட்டுகளை விசாரிக்கவோ போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை' என்றார்.

0 comments