தமிழ் சினிமா படைப்பாளிகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உலகத் தரம் குறித்து கவலைப்பட ஆரம்பித்துள்ளனர். பல படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கின்றன. சில விருதுகளையும் பெறுகின்றன. இந்த புதிய மாற்றம் திரைப்பட வர்த்தகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது.

இதனை பு‌ரிந்து கொண்டவர்கள் தங்களது படத்தை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

கௌதம் தனது விண்ணைத்தாண்டி வருவாயா ஆடியோ வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்தினார். ரஹ்மானின் உலகம் தழுவிய பிரபலம் இந்தப் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது.

இயக்குனர் விஜய்யும் தனது மதராசப்பட்டணம் படத்தின் பி‌‌ரீமியர் ஷோவை லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளார். ஆர்யா நடித்திருக்கும் இந்தப் படம் சுதந்திரத்துக்கு முந்தையை சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் லண்டனைச் சேர்ந்த ஆமி ஜேக்சன் நடித்துள்ளார். இவர் மிஸ் டீன் வேர்ல்ட் பட்டம் வென்றவர்.

இந்திப் படங்களை வெளிநாட்டில் விளம்பரப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் பி‌‌ரீமியர் ஷோ நடத்தப்படும். சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாடுகளில் சில லட்சங்கள் மட்டுமே வசூலித்துக் கொண்டிருந்த இந்தி சினிமாக்கள் இன்று கோடிகளில் வசூலிக்கின்றன. மை நேம் இஸ் கான் யுகே-யில் இதுவரை 15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்திப் படங்களின் விளம்பர யுக்தியை மதராசப்பட்டணம் தமிழில் தொடங்கிவைக்கப் போகிறது. நல்லதே நடக்கட்டும்.

0 comments