சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது.


தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும்.

நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக, மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது.

விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள். விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.


இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது.

தமிழகத்தில் தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது’’என்று தெரிவித்துள்ளார்.

0 comments