இலங்கையின் பிரபல இசை, நடன கலைஞர் சிறீதர் பிச்சையப்பா, சுகயீனம் காரணமாக தனது 47 வது வயதில் நேற்று காலமானார்.

1963 ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ம் திகதி பிறந்த இவர், நாடக கலைஞர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் எழுத்தாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஓவியர் என பல்வேறு பரிமாணங்களில், தமிழ் மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்.

1986 ம் ஆண்டு தனது பாரியார் நிலாமதியுடன் டென்மார்க்கில் நடைபெற்ற இசை நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டு, உலகம் முழுக்க பிரபல்யமானார்.

இவருடன், மேஜர் சுந்தரராஜன், பீ.எஸ்.அப்துல் ஹமீட், மரிக்கார் ராம்தாஸ், அப்புக்குட்டி ராஜகோபால், பாடகர் கே.எஸ்.பாலச்சந்திரன், எஸ்.கே.ராஜன் ஆகியோர் இணைந்து நடத்திய அந்நிகழ்வு, இலங்கை தமிழ்க்கலைஞர்கள் வெளிநாடுகளில் நடத்திய மாபெரும் கலைநிகழ்வுகளில் ஒன்றாக சாதனை படைத்திருந்தது.

இறுதியாக அவர் மித்திரன் வார மலரில், 'கலா பவனம்' எனும் தொடரை எழுதிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாயக கலைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்த சிறீதருனுடைய இழப்பு, அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

0 comments