சினிமாத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு நடிகர், நடிகைகள் நிர்ப்பந்தம் செய்யப்படுவதில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய நடிகர் அஜீத்குமார், சினிமாத்துறையினர் நடத்தும் விழாக்களில் பங்கேற்குமாறு நடிகர்களை பல்வேறு சங்கங்கள் மிரட்டுவதாக புகார் [^] தெரிவித்தார். இதற்கு ரஜினி அங்கேயே எழுந்து நின்று கை தட்டி, அவரது பேச்சை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டார்.

இந் நிலையில், இன்று காலை முதல்வர் கருணாநிதி [^]யை அவரது கோபாலபுரம் இல்லத்தில் திடீரென சந்தித்தார் ரஜினி.

வெளியில் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதில்களும்:

இன்று முதல்வரை நீங்கள் சந்தித்ததன் காரணம்?

என் மகள் சௌந்தர்யா நிச்சயதார்த்தத்திற்கு முதல்வர் குடும்பத்தோடு வந்து ஆசி வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேரில் வந்தேன்.

எந்திரன் படம் எப்போது வெளியாகும்?

படத்தின் சில தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் படம் வெளியாகும்.

அண்மையில் நடந்த திரைப்படத்துறை பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன?

அது அவருடைய உரிமை. அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கிறார்கள். ஆனால், வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். அவர் யாரையும் நிர்ப்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

60 வயதிலும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே?

தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதால், அவர்கள் என் மீது அன்பு செலுத்துவதால் 60 வயதிலும் கதாநாயகனாக நடிக்க முடிகிறது என்றார் ரஜினி.

0 comments