பணக்காரப் பெண், ஆண்களை வெறுக்கும் பெண், வீட்டில் கல்யாண நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கும் பெண்

எல்லாவற்றிலும் சிறந்ததை நாடும் விஷால் உல்லாசப் பேர்வழி. பல உருப்படிகளையும் அலசிப் பார்த்த பிறகே தனக்கானதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளவர். இந்தப் பழக்கத்தைக் காதல் விஷயத்திலும் கடைப்பிடிக்க விரும்புகிறார். அதாவது ஒரே நேரத்தில் மூன்று பெண்களைக் காதலிப்பது, அவர்களில் சிறந்த பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கல்யாணம் செய்துகொள்வது. இந்தத் திட்டத்துக்கு சாரா ஜென், தனுஸ்ரீ தத்தா, நீத்து சந்திரா ஆகிய பெண்கள் அவர் வலையில் விழுகிறார்கள். அதில் நீத்து சந்திராவுக்கு விஷாலின் சுய ரூபம் தெரிந்துவிட நீத்து பழிவாங்கக் கிளம்புகிறார். அதை விஷால் எப்படிச் சமாளிக்கிறார், கடைசியில் யாரை, எப்படிக் கல்யாணம் செய்துகொள்கிறார் என்பதே படம்.

பணக்காரப் பெண், ஆண்களை வெறுக்கும் பெண், வீட்டில் கல்யாண நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கும் பெண் ஆகிய மூன்று பெண்களிடமும் மூன்று விதமான பொய் வேடம் போட்டு விஷால் ஏமாற்றும் காட்சிகள் ஓரளவு கலகலப்பாக இருக்கின்றன. ஆனால், அந்தக் காட்சிகளை இன்னும் நன்றாக யோசித்திருக்கலாம். எல்லா ஐடியாக்களுமே அசட்டு வாடை!

விஷாலின் குட்டு உடைபட்டு அவருக்கும் நீத்து சந்திராவுக்கும் இடையே மோதல் தொடங்கிய பிறகு நடக்கும் சில திருப்பங்கள் பரவாயில்லை. மூன்று பெண்களுக்கும் உரிய இடம் அளிக்க வேண்டும் என்பதற்காகப் படத்தை இழுத்துக்கொண்டே போகிறார் இயக்குநர்.

சந்தானம், மயில்சாமி, சத்யன், ஆகியோர் புடை சூழ வேலை வெட்டி இல்லாத உல்லாசப் பறவையாக வருகிறார் விஷால். பெண்களிடம் நடித்து ஏமாற்றும் காட்சிகளில் கொஞ்சம் வித்தியாசமான விஷாலைப் பார்க்க முடிகிறது. வழக்கமான ஆக்‌ஷன் ஹீரோவாக சண்டையும் போடுகிறார். கடைசியில் காதலின் அருமையை (?) உணரும் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடிக்க முயல்கிறார். பல இடங்களில் விஜய் போல இமிடேட் செய்கிறார்!

நாயகனின் பைத்தியக்கார பாலிசியை முதலில் தெரிந்துகொள்ளும் நீத்துதான் நடிப்பிலும் முந்திக்கொள்கிறார். தனுஸ்ரீ,சாரா இருவருமே விஷாலுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக போடும் திட்டங்களில் திகட்டத் திகட்ட ரசிக்கவைக்கிறார். கூடவே கிளர்ச்சி ஏற்படுத்தும் உடலமைப்பாலும் கவர்ந்திழுக்கிறார்.

தனிஸ்ரீ தத்தா செழுமையாக இருக்கிறார். ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் இடங்களில் ஓரளவு நன்றாக நடிக்கிறார். விஷாலை நிஜமாகக் காதலிக்கும் பாத்திரத்தில் வரும் சாராவின் முகத்தில் எப்போதும் சோகம் அப்பியிருப்பது ஏன் என்று தெரியவில்லை. இவரது நடிப்பைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை.

பெயருக்கு மட்டும் ஆளுக்கொரு வேலையைச் சொல்லிக்கொண்டு காமெடியன்களாக தலைகாட்டும் சந்தானம், சத்யன், மயில்சாமி கோஷ்டியினரின் சேட்டைகள் படத்துக்குக் கொஞ்சம் கலகலப்பைச் சேர்க்கின்றன. மொத்தமே மூன்று காட்சிகளில் வரும் பிரகாஷ்ராஜுக்குக் கிடைத்துள்ள பாத்திரம் அவருக்கு எந்தச் சவாலையும் தரவில்லை.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் வித்தியாசமாக உள்ளன. தீராத விளையாட்டுப் பிள்ளை பாடல் மனதில் சட்டென்று ஒட்டிக்கொள்கிறது. அரவிந்த கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாகப் பாடல் காட்சிகளில்.

பெண்களை சக மனிதர்களாக அல்லாமல் தன் காதல் விளையாட்டுக்கான பொம்மைகளாக நினைக்கும் கதாபாத்திரம்தான் இந்தப் படத்தின் மையம். விஷால், சட்டை, செருப்பு இத்யாதிகளுடன் பெண்களை ஒப்பிட்டுப் பேசுவதை அந்தப் பாத்திரத்தின் பார்வை என்று மன்னித்தாலும் நீ பொம்பள, நான் ஆம்பள என்று விஷால் பொதுவாகப் பேசி ஒட்டுமொத்தமாகப் பெண்களை மட்டம் தட்டுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. படத்தில் பல இடங்களில் பெண்களையும் அவர்களது நேர்மையையும் கொச்சைப்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

நாயகன் கடைசியில் மனம் மாறி வருந்துவதாகக் காட்டும் இயக்குநர், அதையும் காமெடியாக்கி நாயகனின் ஆண் திமிருக்கு உரம் சேர்க்கிறார். படத்தின் மையப் பாத்திரத்தின் நோக்கும் போக்கும் பிற்போக்குத்தனமாகவும் சில்லுண்டித்தனமாகவும் இருப்பதால் பாத்திரத்துடன் நம்மால் எந்த விதத்திலும் ஒன்ற முடியவில்லை.

'நீ சரியான ஆம்பிளைய இருந்தா...' என்று நீத்துவும், 'உங்கிட்ட எவ்வளவுதான் பணம் இருந்தாலும் நீ பொம்பளடி; எங்கிட்ட எதுவும் இல்லாட்டியும் நான் ஆம்பளைடி' போன்ற வசனங்களில் இயக்குனர் திருவின் சிந்தனையில் துரு.

எல்லோருமே விளையாட்டுப் பிள்ளைகளாக இருந்ததுதான் வினையாயிவிட்டது!

0 comments